வெள்ளி, 28 மே, 2010

பூவின் பாடல்

வேறொரு தகவலுக்காக இணையத்தில் அலைந்து கொண்டிருந்தபோது தற்செயலாக படிக்கக் கிடைத்தது Khalil Gibran ன் Song of the Flower எனும் கவிதை. எளிமையான வார்த்தைகளில் பூக்களின் மகத்துவத்தை உணர்த்தும் பாடலது. செடியில் இருந்து பறிக்காமல் ஒரு பூவை பார்ப்பதற்கு கூட பழக்கப் படாத பலருக்கும் பூக்களின் பாடல் ஒருபோதும் கேட்பதே இல்லை. இயற்கையின் குரலில் தீராது ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு அன்பான வார்த்தை பூ. நீலக் கூடாரத்தில் இருந்து பச்சைக் கம்பளத்தில் விழுந்த நட்சத்திரங்களே பூக்கள். அந்தக் கவிதை ஏற்படுத்திய ஈர்ப்பின் காரணமாக Gibran ன் மற்ற கவிதைகளையும் வாசிக்கத் துவங்கியுள்ளேன்.

இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்றான பூக்களை பார்த்து புரிந்து கொள்வதென்பதும் அவற்றை நம் வசப்படுத்துவதென்பதும் அவ்வளவு எளிதில்லை என்பதை கல்யாண்ஜியின் இக்கவிதை நிரூபணம் செய்கிறது.

நீ இருக்கும்

திசைக்கு முகம் காட்டி

உன் சதுரமான

எதிர்பார்ப்பின் மேல்

பூக்காது

தொட்டிப்பூ

பூப்பூத்தல் அதன் இஷ்டம்

போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்.

பூக்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட.... எனும் ஜோதிகாவின் முதல் பாடலை என்னால் புறக்கணிக்கவே இயலாது. கண்ணிமைக்காமல் பார்த்து ரசிக்கும் பாடல்களில் ஒன்றிது. மிகுந்த கவித்துவமான வரிகள் கொண்டது. அதையும் மீறி ஜோதிகாவின் மிக லாவகமான நடன அசைவுகளும், முகபாவத்தில் தென்படும் கள்ளமற்ற தன்மையும், வசீகரமும் ஒரு விதமான கட்டுபாடற்ற சந்தோஷத்தை பிரதிபலிக்ககூடியவை. அந்த பாடல் மீதான மயக்கத்தின் விளைவாக முன்பெப்போதோ கவிதை எனும் பேரில் நான் எழுதி முடித்தது இப்போதும் நினைவில் நீங்காமல் இருக்கிறது.

பூக்களின் சிறப்பை

ஆளுயரப் பூவொன்றே

ஆடிப் பாடி தெரிவிக்கிறதே !

***





செவ்வாய், 25 மே, 2010

இசைப்பேரரசு

வெளியூர் பயண சமயங்களில் பேருந்தில் ஏறுவதற்கு முன்பு மனது இரண்டு விஷயங்களுக்காக ஏங்கத் துவங்கும். ஒன்று ஜன்னலோர இருக்கை கிடைக்க வேண்டுமென்று மற்றொன்று எண்பதுகளில் வெளிவந்த இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கவேண்டுமென்று. இரண்டுமே அமைந்து விட்டால் என் வரையில் அது ஒரு உல்லாச பயணம். எதிர்காற்று முகத்தில் அடித்தபடியே, கண்ணில் இருந்து ஓடி மறையும் மரங்களை வேடிக்கை பார்த்தபடியே இசைஞானியின் பாடல்களை கேட்பது அலாதியானது. கேட்பவர் யாவர் மனதையும் பரவசம் கொள்ளச் செய்யும் மாயம் கொண்டது.

இளையராஜாவின் பாடல்கள் மீது நெருக்கம் கொள்ள வைத்தது பள்ளி விடுமுறையின் போது மேற்கொண்ட ஒரு பேருந்து பயணம்தான். அதற்கு முன்பு அவரது பாடல்கள் மீது நெருக்கம் கொண்டதாய் நினைவே இல்லை. ஆனால் அந்த நாள் தொடங்கி இன்று வரை நான் இளையராஜாவின் ரசிகனாய் இருந்து வருகிறேன். இசைஞானியின் மெல்லிசைப் பாடல்களை மனமொன்றி ரசித்துக் கிடந்தால் அதன் பேர் கூட தியானம் என்றே சொல்வேன்.

எல்லோரது மனதிலும் இளையராஜா பாடல்களின் விருப்பப் பட்டியல் ஒன்று நிச்சயம் இருக்கும். அப்படி நான் கொண்டிருக்கும் பட்டியலில் எப்போதும் முதல் ஐந்து இடத்தில் இருப்பவை.

வெள்ளை புறா ஒன்று....

புஞ்சையுண்டு நஞ்சையுண்டு....

இளைய நிலா பொழிகிறதே....

ஒரு தங்க ரதத்தில்....

ஈரமான ரோஜாவே....

எவரேனும் என்னிடம் இளையராஜா பற்றி சிறு குறிப்பொன்று வரையச் சொன்னால் இப்படித்தான் எழுதித் தருவேன்.

கிராமத்து கீதங்கள் கேட்டு வளர்ந்து, கர்நாடக சங்கீதத்தின் சூட்சுமங்கள் தெரிந்து கொண்டு, மேற்கத்திய சங்கீதமும் கற்றுக் கொண்டு எண்பதுகளின் தமிழ்த் திரை உலகை தன் ஆர்மோனியத்தால் ஆட்சி செய்த ஒரு இசைப்பேரரசன்.

***