என் நிறைய இரவுகள் உறக்கமற்றவை. இரவை கடந்து செல்வதற்கு உறக்கம் என்ற ஒரே படகு மட்டுமே உள்ளது. அது முடிவில்லாமல் யாவர் அறைகளிலும் மிதந்து சென்றபடியே இருக்கிறது என்பார்கள். என்னுடைய அந்த படகு மட்டும் பல நேரங்களில் பழுதடைந்து விடுவது புதிராகவே இருந்து வருகிறது. ஆனாலும் அந்த பழுதடைதலை ரசித்துக் கொண்டிருக்கிறேன். சில இரவுகளில் உறக்கம் என்னை கனவுகளின் நுழைவாசலுக்கும் அழைத்துச் செல்கிறது. அது பொது விதி. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல.
இரவெல்லாம் விழித்திருந்து நண்பகல் வரை உறங்குவது என் விடுமுறை நாட்களில் வாடிக்கையானது. படுத்தவுடன் உறக்கம் கொள்வது எனக்கு வெகு அரிதாகவே நிகழ்கிறது. ஹாலில் மாட்டப்பட்டிருக்கும் பாட்டியின் புகைப்படத்தின் கீழ் எரிந்து கொண்டிருக்கும் இரவு விளக்கை பார்த்தபடியே விழித்திருப்பேன். ஆகாயம் பார்த்து படுத்துறங்கும்போது தேவதைகளின் கண்கள்தான் நட்சத்திரங்களாக நம்மை பார்த்து கொண்டிருக்கின்றன என்று ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன். அதேப் போல் வீட்டினுள் படுத்துக் கொண்டிருக்கும் என்னை அந்த இரவு விளக்கு ஒற்றை கண்ணால் உற்று பார்த்துக் கொண்டிருப்பது போலவே இருக்கும். இரவு விளக்கின் அந்த மெல்லிய வெளிச்சத்தில் ஹாலில் உள்ள அனைத்துமே நிற மாற்றம் கொண்டுவிடுகிறது.
பின்னிரவின் அமைதியில் ஹெட் போனில் ஒரேயொரு பாடல் கேட்பது ரசனைக்குரிய அனுபவம். அந்த ஒரு பாடல் எனக்கு மட்டுமே ஒலிப்பது போல மிக நெருக்கமாக கேட்கும். அப்படி அடிக்கடி கேட்கும் பாடல் ஷ்ரேயா கோஷல் பாடிய agar tum mil jao. அந்தப் பாடல் தரும் மயக்கம் சொல்லில் அடங்காதது. ஏதோ ஒரு கரம் குறிப்பாய் ஒரு வளையல் கரம் தலை கோதி விடுவது போலவே இருக்கும். மீதமிருக்கும் இரவில் என்றோ படித்த கவிதைகள், மனப்பாடம் செய்து வைத்திருக்கும் பாடல்கள், பழகிப் பிரிந்த உறவுகள், பார்த்து ரசித்த காட்சிகள், சொல்லித் தோற்ற பொய்கள், சொல்லத் துடிக்கும் உண்மைகள், செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் இப்படி மனம் ஏதேதோ நினைவுகளை அசை போட்டபடியே இருக்கும். அத்தனையும் மீறி தூக்கம் கண் கூடினாலும் பாதி விழிப்பில் இருப்பது போலவே ஒரு உணர்விருக்கும்.
இரவு தூக்கம் என்பது சாதாரணமானது அல்ல. அதை நிகழ்த்துவதற்கு பகலெல்லாம் விழித்திருக்க வேண்டியிருக்கிறது.
***
