திருவள்ளுவர் மீது தீராத காதல் கொண்டவன் நான். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே திருக்குறள்களை தெரிந்து வைத்திருந்தாலும் மொத்த குறள்களையும் பொருள் சுவையோடு விரல் நுனியில் வைத்திருக்க வேண்டுமென்பது என் பெருங்கனவு. எந்த ஒரு குறளை வாசித்தாலும் அதன் பிரம்மாண்டமும், அழகும், வாழ்வு குறித்த நுட்பமான பதிவுகளும், சொல்லின் சுவையும் புரியத்துவங்குகிறது. என் ஆரம்ப நாட்களில் திருக்குறளை வெறும் அறிவுரை நூலாக மட்டுமே புரிந்து வைத்திருந்தேன். இப்போது போலவே அப்போதும் அறிவுரைகளின் மேல் நம்பிக்கையில்லாததால் திருவள்ளுவர் மீதும் திருக்குறளின் மீது காரணமற்ற கோபமும் அலட்சியமும் இருந்தது. பின்னாளில் அந்த நினைப்பை முதலில் சிதறடித்தது தற்செயலாக நான் படிக்க நேர்ந்த இந்த குறள் தான்:
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின் (280)
கடவுளின் பெயரைச் சொல்லி மொட்டை அடிப்பதும் முடி வளர்ப்பதும் தேவையில்லாதது. உலகம் பழிக்கும் தீயொழுக்கங்களை அழித்துவிட்டாலே போதுமானது என்ற அர்த்தத்தை படித்ததும் திருக்குறளினுள் ஒளிந்திருக்கும் பகுத்தறிவு சிந்தனைகளை தேடத் துவங்கினேன். காரணம் அந்த நாளில் கடவுள் மறுப்பில் தீவிரமாக இருந்தேன்.
என் வாழ்வின் இறுதி வரை நான் கடைபிடிக்க நினைக்கும் இரண்டு முக்கியமான குறள்கள்:
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று (100)
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல் (314)
ஆனால் இன்றைய சூழலில் இவ்விரண்டையும் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதில்லை. என்னால் முடிந்தவரை முயற்சித்து வருகிறேன்.
திருவள்ளுவரை ஒரு பாசமிக்க தாத்தாவைப் போல் பார்த்து வந்த எனக்கு திடீரென தோளில் கை போடும் நண்பனாக நெருக்கம் கொள்ளச் செய்தது இந்த வரிகள்தான்:
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று (1314)
யாவரையும் விட உன் மீதுதான் மிகுந்த காதலோடு இருப்பதாய் சொல்கிறான் காதலன். யாவரையும் விட என்றால் அந்த யாவரும் யார் யார் எனக் கேட்டு செல்லமாக கோபம் கொண்டாளாம் காதலி. அசந்தே போனேன்.
திருவள்ளுவரை தெய்வப் புலவராய் ஏற்றுக்கொள்வதை விட மனித வாழ்வின் அத்தனை பக்கங்களையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அலசி ஆராய்ந்து தீர்க்கமான பதில்கள் தந்த ஒரு மாபெரும் விஞ்ஞானியாய் பார்ப்பதற்கே என் மனது விருப்பம் கொள்கிறது.
அவர் மயிலாப்பூரில் பிறந்ததாகவோ, வாசுகி என்ற பெண்ணை மணம் புரிந்ததாகவோ திருக்குறளில் எந்தக் குறிப்பும் இல்லை. அவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு வேறு சான்றுகளும் இல்லை. காரணம் அவர் திருக்குறளைத் தவிர வேறு எதையும் விட்டுச்செல்லவில்லை. இருப்பினும் அந்த ஒன்றே இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்பும் அவர் பேர் சொல்லும்.
***
