ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான வெண்ணிற ஆடை படத்திலுள்ள கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்ல சொல்ல... என்ற பாடலை தொலைக்காட்சியில் தற்செயலாக பார்க்க நேரிட்டது. மெல்லிசை மன்னர்கள் இசையில் கண்ணதாசன் எழுதி பி. சுசீலா பாடிய பாடலது. என்னை ஈர்த்த ஈஸ்ட்மேன் கலர் காதல் பாடல்களில் மிகவும் பரவசப்படுத்தக் கூடியது. நெற்றிக்குள் உண்டான நெருக்கடிகளை தீர்த்து வைக்கும் ஒரு மாயாஜாலப் பாடல் என்று கூட சொல்லலாம்.
காதல் வந்த ஒரு பெண்ணின் மனதில் தோன்றும் ஆசை, வெட்கம், அச்சம் என்ற பெண்மையின் அடையாளங்களை இப்பாடலில் மிகத் துல்லியமாக வெளிப்படுத்தியிருப்பார் நாயகி ஜெயலலிதா. ஒரு கஸ்தூரிமான் ரோஸ் நிற புடவை கட்டிக்கொண்டு கனகாம்பரப்பூவையும் சூடி இயற்கை எழில் பொங்கும் ஒரு மலைச் சரிவில் தன்னை மறந்து துள்ளித் துள்ளி அங்குமிங்கும் ஓடுயாடுவது போலவே இருக்கும் அவரது நடனம். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத வண்ணம் அத்தனை அழகியலோடு படமாக்கப்பட்டிருப்பதுதான் இந்தப் பாடலின் தனித்துவம்.
பாடலின் வரிகள் எளிமையாக அதே நேரம் பெண்மை ததும்பும் ஒரு மகத்துவத் தன்மையில் இருக்கிறது..
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
ஆசை நெஞ்சை சொல்லப் போனால் அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்
என்ற வரிகளில் பண்பாட்டின் அடிப்படையில் ஒரு பெண்ணின் உள்ளார்ந்த காதல் வெளிப்படுகிறது. அதை இன்றைய பெண்களிடம் எதிர்பார்க்கும் தகுதியை பெரும்பாலான ஆண்கள் இழந்து விட்டார்கள்.
அன்றாட வாழ்க்கை அர்த்தமற்று சலிப்பாகத் தோன்றும் வேளையில் அதை சுவாரஸ்யப்படுத்திக் கொள்ள இது போன்ற பாடலும் நடனமும் தேவைப்படுகிறது என்பதையே இப்பாடல் உணர்த்துகிறது என்று நினைக்கிறேன்.
வாழ்வு தரும் நெருக்கடிகளிலிருந்து சற்றே விடுபடுவதற்கு என் போன்ற எளிய மனிதற்கு விருப்பமான சினிமாப் பாடல்களை முணுமுணுப்பதைத் தவிர வேறு எளிய வழியேது.
***
