ஒரு சாயங்காலப் பொழுதில் மொட்டை மாடியில் உலாத்திக் கொண்டிருந்த போது யதேச்சையாக கண்ணில் பட்டது அந்தக் காட்சி. பின்னாடித் தெருவில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு நடுத்தர வயது பெண்மணி அந்த வீட்டுப் பிள்ளைகளோடு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அதற்கு முன் அப்படியொரு குதூகலத்தில் அந்த மொட்டை மாடி இருந்ததே இல்லை. பெரியவர்கள் சிறுவர்களோடு விளையாடும் தருணம் அபூர்வமானது மட்டுமல்ல அது அத்தனை அழகானதும் கூட என்பதை அந்தக் காட்சி உணர்த்தியது. ஊரிலிருந்து வந்திருக்கும் அந்தப் பெண்ணை வாஞ்சையோடு அந்தப் பிள்ளைகள் வார்த்தைக்கு வார்த்தை அத்தை அத்தை என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணும் தன் வயது மறந்து ஒரு பள்ளிச் சிறுமி போலவே குதித்தோடியபடி இருந்தார். பார்க்கப் பார்க்க அந்த விளையாட்டு முடிவில்லாது தொடர்ந்து கொண்டே இருக்கும்படி மனது ஏக்கம் கொண்டது. சிறிது நேரத்திற்குள்ளாக இருளத் துவங்கியதும் அனைவரும் கீழ் இறங்கி விட்டார்கள். வெறிச்சோடிக் கிடந்த அந்த மொட்டை மாடியை ஒரு மெல்லிய சோகத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தேன்.
ஒரு பொம்மையாக இருந்து கொண்டு குழந்தையின் கை விரல் படாமல் போவது எத்தனை துரதிஷ்டமானதோ அத்தனை துரதிஷ்டமானது சிறுவயதில் பெரியவர்களோடு ஓடியாடி விளையாடாமல் போவதும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
சில சமயங்களில் குழந்தைகள் பெற்றோர்களை விடவும் மற்ற உறவுமுறைகளோடு அதிக நெருக்கம் கொண்டுவிடுகிறார்கள். அதிலும் பெரியம்மாக்கள் மீதும் அத்தைமார்கள் மீதும் கொள்ளும் நெருக்கம் மிக அடர்த்தியானது. கண்டிப்புகள் ஏதுமின்றி காட்டப்படும் அன்பின் சொந்தக்காரர்களாக மட்டுமே அவர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். அவர்களின் வருகையால்தான் வீடு சிரிப்பும் உற்சாகமுமாக தோற்றம் கொண்டுவிடுகிறது. அதனால் தான் என்னவோ குழந்தைகள் அவர்களின்பால் அதிகம் ஈர்க்கப்பட்டுவிடுகிறார்கள். ஆனால் அந்த ஈர்ப்பு அப்படியே தொடர காலம் ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை.
இந்தப் பதிவை எழுதுவதற்கு காரணம் என் பால்யத்தில் நானும் அப்படி ஒரு சிலரினால் ஈர்க்கப்பட்டவன்தான். ஆனால் ஒருபோதும் அவர்களோடு ஓடியாடி விளையாடியதில்லை. அந்த ஏக்கத்தின் எழுத்து வடிவம் என்று கூட இதைச் சொல்லலாம்.
***
