புதன், 24 ஆகஸ்ட், 2011

தர்மத்தின் அம்சம்

என் வரையிலான மகாபாரத வாசிப்பு ஆழமற்றதுதான் என்றாலும் ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் அது என்னைமீறிய ஈர்ப்பில் அழைத்துச் சென்று கொண்டேயிருக்கிறது. பின்னால் போவதன் மயக்கம் தீரவேயில்லை. மகாபாரதத்தில் என் பெருவிருப்பத்துக்குரிய கதாபாத்திரம் விதுரன் தான். விதுரன் போன்ற மதிநுட்பமும், நேர்மையும், பாசாங்கற்ற பார்வையும், யாருக்கும் அஞ்சாமல் நல்லவற்றை எடுத்துரைத்தல் போன்றவற்றில் அவனுக்கு இணையாக சொல்லக்கூடியவர்கள் வேறு யாருமில்லை. பணிப்பெண்ணிற்கு மகனாக பிறந்ததால் அவனடைந்த அவமானங்கள் அநேகம். அவனது பால்யம் புறக்கணிப்புகளால் மட்டுமே நிரம்பியது. இருப்பினும் தனக்கு ஏற்பட்ட அவமானம் அத்தனையும் சகித்துக்கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் நல்லதை மட்டுமே நினைத்த ஒரே ஆள். அவன் தர்மத்தின் ஒட்டு மொத்த அம்சம்.


போரினைத் தவிர்க்க தான் மேற்கொண்ட தூது முயற்சிகள் யாவும் தோற்றுப் போனதில் தனது உறக்கமின்மையை விதுரனிடம் சொல்லிப் புலம்புகிறான் திருதராஷ்டிரன். அப்போது விதுரன் எடுத்துரைக்கும் யாவும் கிருஷ்ணனின் கீதைக்கு நிகரானது. பொருளை பறிகொடுத்தவன், காமத்தோடு இருப்பவன், திருடன் ஆகியோருக்கும் மற்றும் வலிமையற்றவன் வலிமை மிகுந்த சான்றோர்களை எதிர் கொள்ளும் போதும் உறக்கம் சாத்தியமற்றுப் போகும். இதில் நீங்கள் எந்த வகையில் துன்பப்படுகிறீர்கள் எனக் கேட்பான் விதுரன். மேலும் இரவில் நிம்மதியாய் உறங்க வேண்டுமென்றால் அதற்குத் தக்கவைகளை பகலிலேயே செய்து விடவேண்டுமென்பான். பதிலற்றுப் போவான் திருதராஷ்டிரன்.


அகந்தை, சுயநலம், நம்பிக்கைத் துரோகம், மாபாதகம், பெருங்கோபம், அதிகப்படியான பேச்சு ஆகிய ஆறும் மனிதனின் ஆயுளை வெட்டும் கூரிய கத்திகள் என்பது விதுரனின் வார்த்தைகள் மட்டுமல்ல வாழ்வு முறையும் தான். அவனது அரசியல் பார்வைகளனைத்தும் அப்பழுக்கற்றது. யாரும் ஒருத்துளி களங்கம் காணமுடியாதபடி பொதுவான யுத்த நியதிகளை ஏற்படுத்தியது விதுரனின் தனிப்பெரும் அரசியல் ஆளுமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு. ஆனால் போரில் சிறிதளவும் விருப்பமின்றி யார் பக்கமும் வில்லேந்தப் போவதில்லை என்று தன் பேச்சைக் கூட ஒடுக்கிகொண்டு துறவறம் போனவன். சொல்லப் போனால் மகாபாரதத்திற்கே உப்பாயிருந்தவன் விதுரன்தான். விதுரனின் வாதங்கள் யாவும் வாழ்வியல் பாடம்.

 
சாணக்கியன் பேசப்பட்டது மாதிரி அரசியல் பேசும் போது யாரும் விதுரனை மேற்கோள் காட்டாதது ஏனென்று புரியவேயில்லை.



***