வியாழன், 16 செப்டம்பர், 2010

உறக்கம் என்ற படகு

என் நிறைய இரவுகள் உறக்கமற்றவை. இரவை கடந்து செல்வதற்கு உறக்கம் என்ற ஒரே படகு மட்டுமே உள்ளது. அது முடிவில்லாமல் யாவர் அறைகளிலும் மிதந்து சென்றபடியே இருக்கிறது என்பார்கள். என்னுடைய அந்த படகு மட்டும் பல நேரங்களில் பழுதடைந்து விடுவது புதிராகவே இருந்து வருகிறது. ஆனாலும் அந்த பழுதடைதலை ரசித்துக் கொண்டிருக்கிறேன். சில இரவுகளில் உறக்கம் என்னை கனவுகளின் நுழைவாசலுக்கும் அழைத்துச் செல்கிறது. அது பொது விதி. அதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

இரவெல்லாம் விழித்திருந்து நண்பகல் வரை உறங்குவது என் விடுமுறை நாட்களில் வாடிக்கையானது. படுத்தவுடன் உறக்கம் கொள்வது எனக்கு வெகு அரிதாகவே நிகழ்கிறது. ஹாலில் மாட்டப்பட்டிருக்கும் பாட்டியின் புகைப்படத்தின் கீழ் எரிந்து கொண்டிருக்கும் இரவு விளக்கை பார்த்தபடியே விழித்திருப்பேன். ஆகாயம் பார்த்து படுத்துறங்கும்போது தேவதைகளின் கண்கள்தான் நட்சத்திரங்களாக நம்மை பார்த்து கொண்டிருக்கின்றன என்று ஒரு கட்டுரையில் படித்திருக்கிறேன். அதேப் போல் வீட்டினுள் படுத்துக் கொண்டிருக்கும் என்னை அந்த இரவு விளக்கு ஒற்றை கண்ணால் உற்று பார்த்துக் கொண்டிருப்பது போலவே இருக்கும். இரவு விளக்கின் அந்த மெல்லிய வெளிச்சத்தில் ஹாலில் உள்ள அனைத்துமே நிற மாற்றம் கொண்டுவிடுகிறது.

பின்னிரவின் அமைதியில் ஹெட் போனில் ஒரேயொரு பாடல் கேட்பது ரசனைக்குரிய அனுபவம். அந்த ஒரு பாடல் எனக்கு மட்டுமே ஒலிப்பது போல மிக நெருக்கமாக கேட்கும். அப்படி அடிக்கடி கேட்கும் பாடல் ஷ்ரேயா கோஷல் பாடிய agar tum mil jao. அந்தப் பாடல் தரும் மயக்கம் சொல்லில் அடங்காதது. ஏதோ ஒரு கரம் குறிப்பாய் ஒரு வளையல் கரம் தலை கோதி விடுவது போலவே இருக்கும். மீதமிருக்கும் இரவில் என்றோ படித்த கவிதைகள், மனப்பாடம் செய்து வைத்திருக்கும் பாடல்கள், பழகிப் பிரிந்த உறவுகள், பார்த்து ரசித்த காட்சிகள், சொல்லித் தோற்ற பொய்கள், சொல்லத் துடிக்கும் உண்மைகள், செய்து முடிக்க வேண்டிய காரியங்கள் இப்படி மனம் ஏதேதோ நினைவுகளை அசை போட்டபடியே இருக்கும். அத்தனையும் மீறி தூக்கம் கண் கூடினாலும் பாதி விழிப்பில் இருப்பது போலவே ஒரு உணர்விருக்கும்.

இரவு தூக்கம் என்பது சாதாரணமானது அல்ல. அதை நிகழ்த்துவதற்கு பகலெல்லாம் விழித்திருக்க வேண்டியிருக்கிறது.

***

ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஓடி விளையாடும் உறவுகள்

     ஒரு சாயங்காலப் பொழுதில் மொட்டை மாடியில் உலாத்திக் கொண்டிருந்த போது யதேச்சையாக கண்ணில் பட்டது அந்தக் காட்சி. பின்னாடித் தெருவில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு நடுத்தர வயது பெண்மணி அந்த வீட்டுப் பிள்ளைகளோடு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார். அதற்கு முன் அப்படியொரு குதூகலத்தில் அந்த மொட்டை மாடி இருந்ததே இல்லை. பெரியவர்கள் சிறுவர்களோடு விளையாடும் தருணம் அபூர்வமானது மட்டுமல்ல அது அத்தனை அழகானதும் கூட என்பதை அந்தக் காட்சி உணர்த்தியது. ஊரிலிருந்து வந்திருக்கும் அந்தப் பெண்ணை வாஞ்சையோடு அந்தப் பிள்ளைகள் வார்த்தைக்கு வார்த்தை அத்தை அத்தை என்று அழைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணும் தன் வயது மறந்து ஒரு பள்ளிச் சிறுமி போலவே குதித்தோடியபடி இருந்தார். பார்க்கப் பார்க்க அந்த விளையாட்டு முடிவில்லாது தொடர்ந்து கொண்டே இருக்கும்படி மனது ஏக்கம் கொண்டது. சிறிது நேரத்திற்குள்ளாக இருளத் துவங்கியதும் அனைவரும் கீழ் இறங்கி விட்டார்கள். வெறிச்சோடிக் கிடந்த அந்த மொட்டை மாடியை ஒரு மெல்லிய சோகத்தோடு பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

     ஒரு பொம்மையாக இருந்து கொண்டு குழந்தையின் கை விரல் படாமல் போவது எத்தனை துரதிஷ்டமானதோ அத்தனை துரதிஷ்டமானது சிறுவயதில் பெரியவர்களோடு ஓடியாடி விளையாடாமல் போவதும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

     சில சமயங்களில் குழந்தைகள் பெற்றோர்களை விடவும் மற்ற உறவுமுறைகளோடு அதிக நெருக்கம் கொண்டுவிடுகிறார்கள். அதிலும் பெரியம்மாக்கள் மீதும் அத்தைமார்கள் மீதும் கொள்ளும் நெருக்கம் மிக அடர்த்தியானது. கண்டிப்புகள் ஏதுமின்றி காட்டப்படும் அன்பின் சொந்தக்காரர்களாக மட்டுமே அவர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். அவர்களின் வருகையால்தான் வீடு சிரிப்பும் உற்சாகமுமாக தோற்றம் கொண்டுவிடுகிறது. அதனால் தான் என்னவோ குழந்தைகள் அவர்களின்பால் அதிகம் ஈர்க்கப்பட்டுவிடுகிறார்கள். ஆனால் அந்த ஈர்ப்பு அப்படியே தொடர காலம் ஒருபோதும் அனுமதிப்பதேயில்லை.

     இந்தப் பதிவை எழுதுவதற்கு காரணம் என் பால்யத்தில் நானும் அப்படி ஒரு சிலரினால் ஈர்க்கப்பட்டவன்தான். ஆனால் ஒருபோதும் அவர்களோடு ஓடியாடி விளையாடியதில்லை. அந்த ஏக்கத்தின் எழுத்து வடிவம் என்று கூட இதைச் சொல்லலாம்.

***

ஞாயிறு, 4 ஜூலை, 2010

Pen சித்திரங்கள்

     சிறுவயதிலிருந்தே கண்ணில் பட்ட எதையும் காகிதத்தில் வரைந்து விட வேண்டும் என்ற பேராசை இருந்து வருகிறது. படம் வரைதல் மீது எதற்காக இத்தனை ஆர்வம் வந்தது என்று இன்று வரை எனக்குத் தெரியவில்லை. முக்கியமாக மனித முகங்களை அசலாக வரைந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை தணியவேயில்லை. ஆனால் எனக்கிருக்கும் அந்த பேரார்வத்தின் விளைவாக இதுவரை ஒரு முகத்தை கூட உயிர்ப்புடன் வரைய இயலவில்லை. எவ்வித பயிற்சியும் இல்லாமல் ஒரு சித்திரக்காரன் ஆகிவிடுவது ஒன்றும் சாத்தியம் இல்லை என்பது என் மூளைக்கு தெரிந்தாலும் மனம் அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. சுய முயற்சியால் ஒரு ஓவியன் ஆவதே என் வாழ்நாள் லட்சியம் என்றிருக்கிறேன். முகங்களின் பின் பகுதியை ஓரளவு வரைய கற்றுக் கொண்ட என் பேனா முன் பகுதியை வரைவதற்கு மட்டும் இன்னும் பழகவேயில்லை. உயிரோட்டமுள்ள ஓவியங்களை வெறும் பேனா கொண்டு வரைவது மிகவும் பெருமைக்குரியது. வழக்கமாக பருகும் தேநீர் கூட மழை பெய்யும் நேரத்தில் தனித்த ருசி கொண்டுவிடுவதைப் போல எப்போதும் எழுதிக் கொண்டிருக்கும் பேனா வரையத் துவங்கியதும் ஒரு தூரிகையாக மாறிவிடுவதை பல நேரங்களில் உணர்ந்திருக்கிறேன். வண்ணம் தீட்டி பார்ப்பதை விடவும் படங்களை கறுப்பு வெள்ளையில் விட்டுவிடுவதற்கே மனது அதிக விருப்பம் கொள்கிறது.

     சரியான கோடுகள் கொடுக்கப்படும் போது ஒரு ஓவியமும், சரியான வார்த்தைகள் வழங்கப்படும் போது எழுத்துப் படைப்பும் பூரணமாகின்றது. என் ஓவியமும் எழுத்தும் பூரணமாவது எப்போது?

   வாழ்வில் பெரும்பாலான கேள்விகள் பதிலற்று இருப்பதும் ஒரு சுவாரஸ்யம்தான்.

   என் வரைதலில் வீணான காகிதகங்களில் நாலைந்து மரங்களை மிச்சப்படுத்தியிருக்கலாம் என்பதுதான் மிகுந்த வேதனையாக இருக்கிறது.

***



வியாழன், 24 ஜூன், 2010

மீள முடியாத் துயரம்

       இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்தால் ஒரு நாடு ஜெயிக்கும் ஒரு நாடு தோற்கும். ஆனால் எல்லா போரிலும் தோற்கடிக்கப்படுவது மக்கள்தான்.

       என் மனதில் சேமித்து வைத்திருக்கும் வரிகளில் ஆழ்ந்த வேதனையை உருவாக்கக்கூடிய வரிகள் இவை. போர் என்பது வெறும் சொல் அல்ல. அது ஒரு சிதைவியக்கம். மனித வாழ்வில் ஒரு போர் ஏற்படுத்தும் பாதிப்பு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பயங்கரமானது. மீள முடியாத துயரத்திற்கு ஆளாக்கிவிடக்கூடியது. புகலிடம், அகதி முகாம், வீடு திரும்புதல், மறுவாழ்வு என்பதையெல்லாம் அனுபவித்துப் பார்த்தால்தான் அதன் நிஜமான வேதனை புரியக் கூடும். அப்படி ஒரு அசலான அனுபவத்தை தரும் திரைப்படம்தான் “The Pianist”. ஒரு இசைக் கலைஞனின் வாழ்க்கையில் போர் நிகழ்த்தும் பாதிப்பை மிகத் துல்லியமாக பதிவு செய்கிறது இந்த போலந்து நாட்டின் திரைப்படம். போரினால் ஏற்படும் ஒரு தனி மனித துயரத்தின் மீதான முழுமையான பார்வை. அதேப் போல் உயிரை இழக்கக் கூடிய கடுமையான போர்ச் சூழலில் மாட்டிக் கொண்ட போதும் கூட தன் மகனுக்கு சிறைக் கொடுமையோ, சாவதற்காகத் தாங்கள் கொண்டு வரப்பட்ட விஷயமோ தெரிந்து விடக்கூடாது என நகைச்சுவை உணர்வோடு போராடும் ஒரு நேசமிக்க தந்தையின் சாமர்த்தியமே “Life is Beautiful” எனும் இத்தாலிய நாட்டுத் திரைப்படம். யாவராலும் கட்டாயம் பார்க்கப்பட வேண்டிய திரைப்படங்கள் இவை.

        யுத்தம் நின்றாலும் அதனால் ஏற்பட்ட விளைவுகளும் அதன் தழும்புகளும் ஒருபோதும் அழிவதே இல்லை. அது தலைமுறைகளைத் துரத்திக்கொண்டே இருக்கும் துர்கனவு. இலங்கைத் தமிழ் மக்கள் அதன் வேதனையை முழுமையாக அறிந்தவர்கள். இலங்கையில் நடந்த யுத்தத்தை வெறும் செய்தியாகவும் அதனால் நிகழ்ந்த மரணங்களை வெறும் புள்ளி விபரமாகவும் நினைத்துக் கொண்டிருந்த எனக்கு அதன் உண்மையான வலியை ஓரளவாவது புரிந்து கொள்ள கற்றுக் தந்தது இந்தத் திரைப்படங்கள்தான்.

***

திங்கள், 21 ஜூன், 2010

ஒரு குறுஞ்செய்தி

    
    எனக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் யாவும் யாரோ எழுதி பரிமாற்றம் செய்யப்படும் நகல்களாகவே இருக்கின்றன. ஆனபோதும் அவற்றின் மீது அலட்சியம் காட்ட மனது ப்ரியப்பட்டதேயில்லை. மாறாக ஒரு தனிக் கவனத்தோடுதான் வாசித்து வருகிறேன். காரணம் அதில் அடுத்தவர் மீதான ஒரு சிறு அக்கறையும் எதையும் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற மனதும் ஒளிந்திருக்கிறது.

      பல மாதங்களுக்கு முன்னால் ஒரு விடுமுறை நாளின் மதிய நேரத்தில் அப்படி வந்த குறுஞ்செய்தி ஒன்று என்னை ஆழ்ந்து யோசிக்க வைத்தது. ஏற்கனவே கேள்விப் பட்டிருந்த ஒன்றுதான் என்றாலும் அதுப்பற்றி முன் எப்போதும் தீவிரமாக யோசித்ததேயில்லை.

செருப்பில்லையே என்று கவலைப்படுகிறவன்

காலில்லாதவனைப் பார்த்து

ஆறுதல் அடையவேண்டும் என்று

அக்குறுஞ்செய்தி சொல்லியது.

   செருப்பில்லாதவனுக்குக் காலில்லாதவனைப் பார்த்தால் ஆறுதல் கிடைக்குமெனில் காலில்லாதவன் ஆறுதல் அடைய யாரைப் பார்க்க வேண்டும்? செருப்பில்லையே என்று வருந்துகிறவன் சம்பாதித்து செருப்பு வாங்க முயல வேண்டுமே தவிர காலில்லாதவனைத் தேடி ஏன் அலைய வேண்டும்? மேலும் காலில்லாதவனைப் பார்த்து ஆறுதல் அடைவது எத்தனை குரூரமானது?

     தாழ்ந்தவர்களைப் பார்த்து ஆறுதல் அடையும் மனது நிச்சயம் உயர்ந்தவர்களைப் பார்த்து பொறாமையும் படச்செய்யும். விளைவு நிம்மதியின்மை. எனவே என் வரையில் இரண்டுமே தவறானதாகத் தெரிகிறது.

உனக்கும் கீழே

உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து

நிம்மதி நாடு...

        என்ற கண்ணதாசனின் வரிகள் உங்களுக்கு பிடிக்குமா? எனக்கு அந்த  வரிகள் பிடிக்காமல் போகத் துவங்கிய நாள் அன்றுதான்.

***

திங்கள், 7 ஜூன், 2010

கர்ண மோட்சம்

கடந்த டிசம்பர் மாதத்தில் ஒரு நாள் அதிசயமாக அதிகாலை ஐந்து மணிக்கு முன்னதாகவே உறக்கம் கலைந்து எழுந்து கொண்டேன். வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தார்கள். பிந்தைய இரவில் கூட மழை பெய்து ஓய்ந்திருந்தது. அந்த குளிர்மையான அதிகாலையிலும் தூக்கம் பிடிக்கவில்லை. அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்ய முடியாமல் வெற்று யோசனைகளுடன் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தபோது சட்டென நினைவுக்கு வந்தது கர்ண மோட்சம். வெகு நாட்களாகவே பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த குறும்படம் அது. சிறந்த குறும்படத்திற்கான பல மாநில விருதுகளும் தேசிய விருதும் பெற்றது. இன்று எப்படியும் பார்த்தாக வேண்டும் என்ற ஆவலில் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து காணத் துவங்கினேன். விடிவதற்கு முன்பாக ஒரு படத்தை பார்ப்பது அதுவே முதல் முறை. தனித்த அனுபவமாக இருந்தது. பத்து நிமிடங்களே ஓடக்கூடிய படம் என்றாலும் அது ஏற்படுத்திய பாதிப்பு மனதை துவளச் செய்தது. கர்ண மகா ராஜா வேஷம் கட்டும் ஒரு கூத்துக் கலைஞனின் இன்றைய வாழ்வு நிலை பற்றிய அதிநுட்பமான பதிவு. இன்றைய நாகரிகமும் தொழில் நுட்ப வளர்ச்சியும் எத்தனை பேரின் வாழ்வாதாரத்தை பின்னோக்கி இழுத்து போகிறதோ எனும் கேள்வி காண்பவர் யாவர் மனதிலும் நிச்சயம் எழக்கூடும். தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிகப் புகழ் பெற்ற கலை வடிவமே தெருக் கூத்துதான். அந்தக் கலைஞர்களின் இன்றைய தினசரி வாழ்க்கைப்பாடு எத்தனை போராட்டமிக்கதாக ஆகிவிட்டதென்பதும் அதை ஏற்றுக்கொள்ள அவர்கள் எப்படி பழகிக் கொண்டுவிட்டார்கள் என்பதும் புரியத் துவங்கியது. ஜெயிக்கவும் முடியாமல் தமது கலையை கைவிட்டுத் திரும்பிச் செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்கள்தான் எத்தனை பேரோ? யோசிக்க யோசிக்க மனது எதைஎதையோ பின்னுகிறது.

***





புதன், 2 ஜூன், 2010

கோபாலரத்னம் சுப்ரமணியம்

சமகால தமிழ்த் திரைப்பட இயக்குனர்களில் என் அதிகபட்ச விருப்பத்துக்குரியவர் மணிரத்னம். இந்திய நவீன சினிமாவின் தனிப்பெரும் ஆளுமைமிக்கவர். அவர் மீது மிகுந்த மதிப்பும் வியப்பும் கொண்டிருக்கும் பலரில் நானும் ஒருவன். நான் மணிரத்னத்தின் பெரும்பாலான படங்களை பார்த்திருக்கிறேன். சினிமாக் கலையின் நுட்பங்களை ஒரு ஆசானைப் போல தன் திரைப்படங்களின் மூலம் கற்றுத் தருகிறார். குறிப்பாக அதன் ஒளிப்பதிவு, திரைக்கதை, வசனம், திரை இசை, நடிப்பு, சினிமா பார்வையாளர்கள் என்று தனித் தனியாக கவனம் கொண்டு ஆழ்ந்து செயல்படக் கூடியவர்.

அவரது திரைப்படங்களை பலமுறை பார்க்கும் பழக்கமுடையவன் நான். ஒவ்வொரு முறையும் அவை தரும் நெருக்கமும் அறிவும் சினிமாவை புரிந்து கொள்வதை மேம்படுத்துகிறது. தளபதி படத்தின் நிறம் தனித்துவமிக்கது. மௌன ராகத்தை எப்போது பார்க்க நேரிட்டாலும் ஏதோவொரு மாயம் படம் முடியும் வரை பார்க்கச் செய்து விடுகிறது. நாயகனைப் போல் வேறு எந்த திரைப்படமும் ஒரு தனி மனிதனின் சரிதத்தை பால்யத்தில் இருந்து முதுமை வரை இத்தனை நுட்பமாக சித்தரித்ததாய் தெரியவில்லை. அஞ்சலி படம் பார்த்த இரவு உறக்கமற்றது. தீவிரவாதப் பின்னணியில் ஒரு தேசாபிமானமிக்க காதல் கதையை இவரைத் தவிர யாராலும் அத்தனை நேர்த்தியாக இயக்க முடியாது. பம்பாய், இருவர், உயிரே, கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்கள் சமூகத்தின் அடையாளங்கள்.

மணிரத்னம் தனது படங்களின் எந்த ஒரு காட்சியையும் வெளிநாட்டில் படம் பிடிக்காதவர் என்பது இமாலய வியப்பிற்குரியது. மேலும் கைக்கடிகாரம் அணியாதவர். ஆனால் எப்போதும் ஒரு கடிகாரத்தை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்திருப்பவர். ஆரம்ப நாள் முதல் இன்று வரை தனது படங்களின் மொத்த ஸ்க்ரிப்ட்டையும் பென்சிலால் எழுதி வருபவர். மழை மீதும் ரயில் மீதும் இயக்குனருக்கு அப்படி என்னதான் காதலோ எல்லா படங்களிலும் இடம் பெற்று விடுகின்றன.

மணிரத்னம் அதிகம் பேசுவதில்லை. அவருக்கும் சேர்த்து அவரது படைப்புகளே பேசுகின்றன. இன்று பிறந்த நாள் காணும் இயக்குனருக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

***

வெள்ளி, 28 மே, 2010

பூவின் பாடல்

வேறொரு தகவலுக்காக இணையத்தில் அலைந்து கொண்டிருந்தபோது தற்செயலாக படிக்கக் கிடைத்தது Khalil Gibran ன் Song of the Flower எனும் கவிதை. எளிமையான வார்த்தைகளில் பூக்களின் மகத்துவத்தை உணர்த்தும் பாடலது. செடியில் இருந்து பறிக்காமல் ஒரு பூவை பார்ப்பதற்கு கூட பழக்கப் படாத பலருக்கும் பூக்களின் பாடல் ஒருபோதும் கேட்பதே இல்லை. இயற்கையின் குரலில் தீராது ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு அன்பான வார்த்தை பூ. நீலக் கூடாரத்தில் இருந்து பச்சைக் கம்பளத்தில் விழுந்த நட்சத்திரங்களே பூக்கள். அந்தக் கவிதை ஏற்படுத்திய ஈர்ப்பின் காரணமாக Gibran ன் மற்ற கவிதைகளையும் வாசிக்கத் துவங்கியுள்ளேன்.

இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்றான பூக்களை பார்த்து புரிந்து கொள்வதென்பதும் அவற்றை நம் வசப்படுத்துவதென்பதும் அவ்வளவு எளிதில்லை என்பதை கல்யாண்ஜியின் இக்கவிதை நிரூபணம் செய்கிறது.

நீ இருக்கும்

திசைக்கு முகம் காட்டி

உன் சதுரமான

எதிர்பார்ப்பின் மேல்

பூக்காது

தொட்டிப்பூ

பூப்பூத்தல் அதன் இஷ்டம்

போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்.

பூக்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட.... எனும் ஜோதிகாவின் முதல் பாடலை என்னால் புறக்கணிக்கவே இயலாது. கண்ணிமைக்காமல் பார்த்து ரசிக்கும் பாடல்களில் ஒன்றிது. மிகுந்த கவித்துவமான வரிகள் கொண்டது. அதையும் மீறி ஜோதிகாவின் மிக லாவகமான நடன அசைவுகளும், முகபாவத்தில் தென்படும் கள்ளமற்ற தன்மையும், வசீகரமும் ஒரு விதமான கட்டுபாடற்ற சந்தோஷத்தை பிரதிபலிக்ககூடியவை. அந்த பாடல் மீதான மயக்கத்தின் விளைவாக முன்பெப்போதோ கவிதை எனும் பேரில் நான் எழுதி முடித்தது இப்போதும் நினைவில் நீங்காமல் இருக்கிறது.

பூக்களின் சிறப்பை

ஆளுயரப் பூவொன்றே

ஆடிப் பாடி தெரிவிக்கிறதே !

***





செவ்வாய், 25 மே, 2010

இசைப்பேரரசு

வெளியூர் பயண சமயங்களில் பேருந்தில் ஏறுவதற்கு முன்பு மனது இரண்டு விஷயங்களுக்காக ஏங்கத் துவங்கும். ஒன்று ஜன்னலோர இருக்கை கிடைக்க வேண்டுமென்று மற்றொன்று எண்பதுகளில் வெளிவந்த இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கவேண்டுமென்று. இரண்டுமே அமைந்து விட்டால் என் வரையில் அது ஒரு உல்லாச பயணம். எதிர்காற்று முகத்தில் அடித்தபடியே, கண்ணில் இருந்து ஓடி மறையும் மரங்களை வேடிக்கை பார்த்தபடியே இசைஞானியின் பாடல்களை கேட்பது அலாதியானது. கேட்பவர் யாவர் மனதையும் பரவசம் கொள்ளச் செய்யும் மாயம் கொண்டது.

இளையராஜாவின் பாடல்கள் மீது நெருக்கம் கொள்ள வைத்தது பள்ளி விடுமுறையின் போது மேற்கொண்ட ஒரு பேருந்து பயணம்தான். அதற்கு முன்பு அவரது பாடல்கள் மீது நெருக்கம் கொண்டதாய் நினைவே இல்லை. ஆனால் அந்த நாள் தொடங்கி இன்று வரை நான் இளையராஜாவின் ரசிகனாய் இருந்து வருகிறேன். இசைஞானியின் மெல்லிசைப் பாடல்களை மனமொன்றி ரசித்துக் கிடந்தால் அதன் பேர் கூட தியானம் என்றே சொல்வேன்.

எல்லோரது மனதிலும் இளையராஜா பாடல்களின் விருப்பப் பட்டியல் ஒன்று நிச்சயம் இருக்கும். அப்படி நான் கொண்டிருக்கும் பட்டியலில் எப்போதும் முதல் ஐந்து இடத்தில் இருப்பவை.

வெள்ளை புறா ஒன்று....

புஞ்சையுண்டு நஞ்சையுண்டு....

இளைய நிலா பொழிகிறதே....

ஒரு தங்க ரதத்தில்....

ஈரமான ரோஜாவே....

எவரேனும் என்னிடம் இளையராஜா பற்றி சிறு குறிப்பொன்று வரையச் சொன்னால் இப்படித்தான் எழுதித் தருவேன்.

கிராமத்து கீதங்கள் கேட்டு வளர்ந்து, கர்நாடக சங்கீதத்தின் சூட்சுமங்கள் தெரிந்து கொண்டு, மேற்கத்திய சங்கீதமும் கற்றுக் கொண்டு எண்பதுகளின் தமிழ்த் திரை உலகை தன் ஆர்மோனியத்தால் ஆட்சி செய்த ஒரு இசைப்பேரரசன்.

***

செவ்வாய், 18 மே, 2010

கரையும் வைரம்

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்                                 (1302)

கணவன் மனைவிக்கிடையேயான ஊடல், உணவில் உப்பின் அளவாய் இருத்தல் வேண்டும். ஊடலை நீள விட்டால் அந்த உப்பு சிறிது மிகுந்து விட்டது போல் பயனற்று விடும் என்கிறார் வள்ளுவர்.

இதை படிக்கும் போதெல்லாம் மனதில் சில கேள்விகள் உருவாகின்றன. எதற்காக வள்ளுவர் இல்லற ஊடலின் அளவைக் குறிக்க உப்பை உதாரணம் காட்ட வேண்டும்? இனிப்பு, புளிப்பு என்று வேறு எந்தச் சுவையின் அளவு கூடினாலும் உணவு வீண்தானே? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணமிருக்குமா?

இந்தக் கேள்விகளுக்கான விடையை சமீபத்தில்தான் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் அறிந்து கொண்டேன். இனிப்பு, புளிப்பு, காரம் ஆகிய சுவைகளின் அளவு கூடியிருந்தாலோ குறைந்திருந்தாலோ அதை அந்த உணவின் நிறம் ஓரளவு காட்டிக் கொடுத்துவிடும். ஆனால் உப்புச் சுவை அப்படியல்ல. அதன் அளவு எதுவாயிருந்தாலும் ஒருபோதும் எவர் கண்ணுக்கும் தெரிவதில்லை. பிறகு தான் புரிந்தது வள்ளுவரின் உப்பு உதாரணத்தின் நுட்பம்.

வள்ளுவர் புகழ் வாழ்க.

சந்தேகம் தீர்ந்து போனாலும் மனம் ஏனோ உப்புப் பற்றியே சிந்தித்துக் கிடந்தது. அன்றாட வாழ்வில் உப்பின் சிறப்பும் மதிப்பும் நம்மால் உணரப்படாமல் இருப்பது கவலை தருவதாயிருக்கிறது. வணிகப் பொருள், பிரதான உணவுப் பொருள் என்பதை மீறி உப்புப் பற்றி நான் படித்ததில் சில குறிப்புகள்.

- இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு எல்லாம் ஏதோவொரு காய்கனியில் இயற்கையாகவே உள்ளது. ஆனால் உப்புச் சுவை மனிதன் கண்டுப்பிடித்தது.

- உப்பை ஒரு ஆயுதமாக்கிய காந்தியின் போராட்டம் வெகு தனித்துவமானது. தண்டி கடற்கரையில் காந்திஜியின் நினைவு ஸ்தூபி ஒன்றுள்ளது. காந்தி பிறந்த நாளின் போது பலரும் அங்கே ஒரு பிடி உப்பைத் தங்களது அன்பின் அடையாளமாக வைத்துவிட்டு போகிறார்கள். எனவே

உப்பு ஒரு ஆயுதம்

உப்பு - அன்பின் வெளிப்பாடு

உப்பு ஒரு சரித்திரம்.

- மேலும் உப்பு சீனர்களுக்கு வெள்ளைத் தங்கம்

                                 வெள்ளையர்களுக்கு கரையும் வைரம்.

- இதைத் தவிர உப்பு - கண்ணீரின் சுவை

                                                கடலின் முணுமுணுப்பு.

- இன்னும் கவிதையாய் சொல்வதாயின் உப்பு சூரியனுக்கும் கடலுக்கும் பிறந்த குழந்தை.

***

வெள்ளி, 14 மே, 2010

காதலின் சுபாவம்

உலகிலேயே எது மிக சுவாரஸ்யமானது என்ற கேள்விக்கு அடுத்தவரின் காதல் கதை என்றொரு பதில் இருக்கிறது. இதை படிக்கும் போதெல்லாம் இதழ்களின் ஓரம் ஒரு மெல்லிய புன்னகை மலர்வது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அந்த பதிலை மெய்ப்பிப்பதுபோல்தான் அமைகிறது பெருகி வரும் காதல் திரைப்படங்களின் எண்ணிக்கையும் அதன் வெற்றியும். எத்தனையோ விதமான காதல் கதைகள் வந்திருந்த போதிலும் காதல் மீதான வசீகரம் மட்டும் துளியும் குறையவில்லை. அது காதலுக்கே உண்டான தனித்துவம்.


காதல் என்பது வெறும் பாலினக்கவர்ச்சி மட்டும்தானா? கண்ணியமான காதல் என்பதெல்லாம் காணாமல் போய்விட்டதா? பருவ வயதினரின் பொழுதுபோக்குகளில் ஒன்றா? அப்படியெல்லாம் இல்லையெனில் காதலித்தவர்களே தாமாக பிரிந்துவிடுவதும், அதே தீவிரத்துடன் அடுத்தடுத்த காதலில் விழுவதும் எப்படி? காதல் வாழ்வதற்கான மிக ஆதாரத் தேவையா? காதல் எண்ணிக்கையற்ற திருப்பங்களால் நிரம்பியிருப்பது ஏன்? எப்படி புரிந்து கொள்வது காதலை? இப்படி எண்ணற்ற கேள்விகளை யோசித்து யோசித்து மனதில் மிஞ்சியதெல்லாம் ஒருவித குழப்பம்தான். ஒரு வேளை புரிந்து கொள்ளப்பட முடியாமல் இருப்பதுதான் காதலின் சுபாவம் போலும் என்று மனது சுயசமாதானம் செய்துகொள்கிறது.


காதலை மையமாகக் கொண்டு வெளிவந்த சமீபகாலத் திரைப்படங்களில் மிக முக்கியமானதாக நான் கருதுவது ஜீவாவின் உன்னாலே உன்னாலே மற்றும் கெளதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா. இன்றைக்கிருக்கும் காதலின் யதார்த்தத்தை மிக அழகாகவும் ஆழமாகவும் சித்தரித்த பதிவுகள். தேர்ந்த உளவியல் மருத்துவரைப் போல காதல் தரும் பரிதவிப்பையும் காதலர்களின் மனப் பிரச்சனைகளையும் நுண்மையாக ஆய்வு செய்கிறது. வெளிப்படுத்த முடியாத வலியோடு இத்திரைப்படங்கள் முடிவுற்றாலும் அது ஒரு சுகானுபவமாகவே இருக்கிறது.


இன்றைய காதலர்களின் மனக் குழப்பத்தை சினேகனின் இந்தச் சின்னதொரு கவிதை அழகாய் வெளிப்படுத்துகிறது.

     எதுவுமே தெரியாமல்

     உன்னை காதலித்தேன்

     எல்லாம்

     தெரிந்த பின்பு

     உன்னை

     நான் பிரிந்தேன்

     எது தவறு?

     எது சரி?

***

செவ்வாய், 11 மே, 2010

பேசும் படங்கள்

Life is a tragedy when seen in close-up, but a comedy in long shot.

                                                           - Charles Spencer Chaplin

திரைப்படங்களில் இருந்து கற்றுக்கொள்வதற்கு என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு முதலில் சாப்ளினின் படங்களை பாருங்கள் என்பதுதான் என் பதில். சார்லி சாப்ளின் வெறும் கோமாளியல்ல. காதலை பாடிய கவிஞன், அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுத்த ஒரு போராளி, வறுமையை கூட தன் நகைச்சுவை உணர்வால் விரட்டியடித்த ஒர் உயர்ந்த மனிதன். எந்த உறவிலும் சாய்ந்து கொள்ள முடியாத தடுமாற்றத்தோடு சுற்றித் திரியும் ஒரு நாடோடியாக வந்து நட்பையும், காதலையும், மனிதாபிமானத்தையும் திரையில் பதிவு செய்த ஓர் மாமேதை.


சாப்ளிளின் திரைப்படங்களில் என் நிரந்தர விருப்பத்திற்குரியது The Circus, City lights, The Kid ஆகியவை. இந்தப் படங்களை பார்த்து முடிக்கும் போது மனதுக்குள் ஏற்படும் அந்த உணர்வே ஒரு புது அனுபவமாக இருக்கும். இத்தனை பெரிய கால மாற்றத்தை கடந்து தனக்கென தனியான ரசிகர்களை கொண்டிருப்பது சாப்ளின் மட்டுமே. இன்னும் சொல்லப்போனால் சாப்ளினின் பாதிப்பு இல்லாத நடிகர்களே சினிமா உலகில் இல்லை. இவரது நகைச்சுவையைப் பார்த்து சிரிக்காதவர்களே இருக்க முடியாது. அதேப் போல் துளிக் கண்ணீர் சிந்தாதவரும். காரணம் சாப்ளினின் நகைச்சுவை வலியில் இருந்து உருவாவது. சாப்ளினின் திரைப்படங்கள் வழியே வரும் சிரிப்பும் கண்ணீரும் உன்னதமானது. மொழியின்றி அவரது படங்கள் உணர்த்தும் பாடங்கள் ஏராளம். அவற்றை புரிந்துகொள்வதற்கும் வாழ்க்கைப்படுத்துவதற்கும் தேவையாய் இருப்பது மனதின் விருப்பம் மட்டுமே.


ஒரு முறை ஒரு பேட்டியில் நடிகர் விவேக் சொன்னது நினைவுக்கு வருகிறது.

City lights ன் க்ளைமாக்ஸ் காட்சியில் உங்களுக்கு கண்கள் பனித்து, உதடு துடித்து, மேனி சிலிர்த்து, தொண்டை அடைக்கவில்லை என்றால்... உடனே டாக்டரை பார்க்கவும்.

சத்தியமான வார்த்தைகள்.

***

வெள்ளி, 7 மே, 2010

பனி விழும் ஒரு வனம்

பள்ளி நாட்களில் படித்த ஆங்கிலக் கவிதையொன்று இப்போதும் என் நினைவில் பசுமை மாறாமல் இருக்கிறது.  அது Robert Frostன்    Stopping by Woods on a Snowy Evening. பாடப் புத்தகத்தின் வழியே அறிமுகமான போது வெறும் மதிப்பெண் சார்ந்ததாக மட்டுமே பதிவானது. பின்னாளில் தான் அதனுள் பதுங்கியிருந்த வாழ்வு குறித்த ரகசியங்கள் மிதக்கத் துவங்கின. முதல் முறை வாசிக்கும் எவரும் இது இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பனிப் பொழியும் வனப்பகுதியின் மீதான கவிஞரின் லயிப்பு என்றே சொல்லக்கூடும். அடுத்தடுத்த வாசிப்புகளில் தான் அதன் ஆழம் புரியும். இதன் கடைசி நான்கு வரிகள் ஆழ்ந்த அர்த்தமுடையவை. பல முறை அதை வாய்விட்டுச் சொல்லி மகிழ்ந்திருக்கிறேன். வாழ்வில் ஏற்படும் எதிர்ப்பாராத ஈர்ப்புக்கும் அதிலேயே லயித்துக் கிடக்க முடியாதபடி பற்றி இழுக்கும் வாழ்வின் கடமைக்கும் இடையேயான கவிஞரின் மனத் தடுமாற்றத்தை மிகத்துல்லியமாக பதிவு செய்கிறது இக்கவிதை. Frost க்கு மட்டுமல்ல இது யாவருக்கும் பொருந்தக் கூடியதே. என்னைப் பொறுத்த வரையில் இந்தக் கவிதையை வாசிப்பது ஒரு உயர் நிலை அனுபவம்.


Stopping by Woods on a Snowy Evening

Whose woods these are I think I know.
His house is in the village, though;
He will not see me stopping here
To watch his woods fill up with snow.

My little horse must think it queer
To stop without a farmhouse near
Between the woods and frozen lake
The darkest evening of the year.

He gives his harness bells a shake
To ask if there is some mistake.
The only other sound's the sweep
Of easy wind and downy flake.

The woods are lovely, dark, and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

                                Robert Frost
***

செவ்வாய், 4 மே, 2010

நெஞ்சில் ஓர் ஆலயம்

தமிழ் சினிமாவின் சிறந்த பத்து திரைப்படங்களை தேர்வு செய்யச் சொன்னால் அதில் நிச்சயம் ஸ்ரீதரின் “நெஞ்சில் ஓர் ஆலயம்” இடம் பெறும். மிக அற்புதமான ஒரு திரைப்படம். பல ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மதிய நேரத்தில் வீட்டிற்கு வந்திருந்த உறவினர்களோடு சேர்ந்து தொலைக்காட்சியில் இந்தப் படத்தை முதல் முதலாக காணத் துவங்கினேன். ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே படத்தோடு ஒன்றிப்போய் விட்டேன். என்னைத் தவிர யாவரும் உறங்கிவிட்டிருந்தார்கள். படம் முடியும் நேரத்தில் எழுந்து கொண்டவர்கள் கேட்டது என்னை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்படி தான் இவன் ஆஸ்ப்பத்திரிலேயே எடுத்த படத்த தனியா உக்காந்து பாத்துக்கிட்டிருக்கானோ? பிறகு தான் புரிந்தது இதுவரை நான் பார்த்த மொத்த திரைக்கதையும் ஒரு மருத்துவமனைக்குள்ளேயே சுழன்று கொண்டிருக்கிறதென்று. ஆனால் அந்த நினைப்பே வராமல் துளித் தொய்வில்லாத திரைக்கதை என்னைத் திகைக்கச் செய்தது. வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கூட மருத்துவமனைக்கென்றே இருக்கிற தனியான வாசனையை உணரச் செய்வது போன்ற உணர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது படத்தின் காட்சிகள். நடிகர்களின் தேர்வும் பின்னணி இசையும் ஒப்பற்றது. இப்படத்தினை எனக்கு மிகவும் பிடித்திருப்பதற்கான காரணம் எளிமையான வசனங்களும் நுட்பமான திரைக்கதையும் தான். கறுப்பு வெள்ளைத் திரைப்படங்களில் இது ஒரு காவியம் என்றே சொல்வேன்.

***

சனி, 1 மே, 2010

இரவு எத்தனை அழகு

தஞ்சாவூரில் தங்கி படித்து வந்த நாட்களில் தான் இரவில் வானம் எத்தனை அழகு என்பதை தெரிந்து கொண்டேன். நட்சத்திரங்கள் சிதறிக் கிடக்கும் வானத்தின் கீழ் படுத்துக்கொண்டு நண்பர்களோடு பேசிய கதைகளையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் மெய் சிலிர்க்கிறது. நண்பர்கள் யாவரும் உறங்கிய பிறகு நான் மட்டும் தூக்கத்தை புறக்கணித்துவிட்டு நட்சத்திரங்களையும், நிலவையும், வழித் தெரியாமல் அலையும் பறவைகளையும் பார்த்தபடி படுத்துக்கிடப்பேன். ஒவ்வொரு இரவும் தனக்கென தனியான அடர்த்தியும் நறுமணமும் கொண்டதாகவே இருக்கிறது. எதன் எதன் மீதோ எனக்கிருந்த கோபங்கள் யாவும் இரவின் மீது ஈர்ப்பாக மாறியது. ஏனோ ஆகாயமும், நட்சத்திரமும், நிலவும் திடீரென கைதொடும் நெருக்கத்துக்கு வந்துவிட்டது போலிருக்கும். வாய் தானறியாமல் ஏதேதோ பாடல்களை முணுமுணுக்கத் துவங்கும். இரவை ஒரு பழச் சாறு போல ருசியாக்கிக் கொண்டு பருகிக் கிடந்த நாட்கள் அவை. இன்று வரை அந்த இரவுகள் ஈரம் உலராமல் அப்படியே மனதில் இருக்கிறது. தஞ்சை வாசம் முடிந்து வீடு திரும்பிய பிறகு வானம் பார்த்து படுத்துறங்குவதற்கெல்லாம் ஏனோ மனமின்றி போனது.



தற்செயலாக இரண்டு நாட்களுக்கு முன்னால் ஓர் இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மொட்டைமாடியில் சிறிது நேரம் படுக்க வேண்டியதாகியது. அது ஒரு பௌர்ணமி நாளாக இருந்த போதும் இரவையோ நிலவையோ துளி கூட ரசிக்காமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டதை எண்ணி புலம்பிக் கொண்டிருந்தேன். ஆனாலும் நிலவு அதே அழகுடன் நிசப்தமாக வெகுதொலைவில் வானில் அலைந்து கொண்டிருந்தது.

***


புதன், 28 ஏப்ரல், 2010

கடவுளைத் தேடி

கடவுள் உண்டா? இல்லையா? இந்த விவாதம் மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இன்றும் முடிவின்றி தொடர்கிறது. காரணம் இரண்டுப் பக்கமும் பேச இடம் இருப்பதுதான். ஆத்திகர்களால் சந்தேகத்திற்கு இடமின்றி கடவுளை நிரூபிக்க முடியவில்லை. நாத்திகர்களாலும் இயற்கையின் இயக்கம் பற்றிய பல கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. கடவுள் என்ற சொல் ஒரே நேரத்தில் சிலருக்கு பரவசத்தையும் சிலருக்கு பரிகாசத்தையும் தருவதாகயிருக்கிறது.


கடவுளின் இருப்புக் குறித்து தெளிவான பார்வை இல்லாதபோதும் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாகவே இருந்து வருகிறேன். முன்பெல்லாம் கடவுள் இல்லை என்று தீவிரமாக மறுத்த வந்த நான் இப்போது கடவுள் உண்டா இல்லையா என்று எனக்கு தெரியவில்லை என்பதை ஒப்புக் கொள்ளுமளவுக்கு பக்குவம் பெற்றிருக்கிறேன். இல்லை என்று சொல்வதன் மூலம் ஒன்றை மறைமுகமாக உண்டு என ஏற்றுக்கொள்வதாகவே ஒரு நினைப்பு. ஏனெனில் இருக்கும் ஒன்றைத் தானே இல்லை என்று சொல்ல முடியும். மேலும் மற்றவர்களின் அபிப்ராயங்களை வைத்துக் கொண்டு கடவுள் விஷயத்தில் முடிவெடுப்பதில் துளியும் விருப்பம் இல்லாமல் போனது. எனவே எனக்கு நானே கடவுளைத் தேடிப் பார்க்கத் துவங்கினேன். இன்று வரை என்னால் உணரப்படவில்லை. தன் அற்புதங்களை முற்றிலும் அடக்கிவைத்துக்கொண்டிருக்கும் கடவுளின் மீதான மனிதர்களின் நம்பிக்கையையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.


வாழ்வில் எந்த பிடிமானமுமின்றி கலங்கிப் போய் நிற்கும் மனிதர்களுக்கு கோயில்களே புகலிடமாகவும் பிரார்த்தனைகளே பிடிமானமாகவும் உள்ளதை பார்க்கும் போது அது மூட நம்பிக்கையாய் இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும் என்றே மனது விரும்புகிறது. கடவுள் வழிபாட்டைவிடவும் முக்கியமானது சக மனிதனை மதிப்பதும், அவனை புரிந்து கொள்வதுமே ஆகும் என்ற வரிகள் மீது அதீத நம்பிக்கை கொண்டவன் நான்.

***





வியாழன், 22 ஏப்ரல், 2010

வைர வரிகள்

மனது சோர்வுறும் தருணங்களில் என்னால் திரும்பத் திரும்ப வாசிக்கப்படும் கவிதைப் புத்தகம் வைரமுத்துவின் பெய்யெனப் பெய்யும் மழை. என் மனதிற்கு மிக நெருக்கமான கவிதைகள் கவிப்பேரரசினுடயதே. அவரது கவிதைக்கும் எனக்குமான உறவு காரணங்களால் விளக்க முடியாதது. பேச்சிலும் கவிதையிலும் அவரது கவித்துவமான, தனித்தன்மைமிக்க பார்வைகளை அறிந்திருக்கிறேன். எனக்கு அவர் எழுத்துக்களின் மீது உள்ளதை வெறும் ரசிப்பு என்று சொல்ல முடியாது. அர்ப்பணிப்பு, ஆராதனை, சரணாகதி இப்படி ஏதாவது சொல்லலாம். சில ஆண்டு காலம் தொடர்ந்து வைரமுத்துவின் படைப்புகளை வாசித்ததில் நான் அடைந்த மகிழ்வும் அகவெழுச்சியும் அளப்பரியது. தனிமை உணர்வை அவரது கவிதைகளைப்போல மிக நுட்பமாக வேறு எந்த கவிதையிலும் இதுவரை உணர்ந்ததில்லை.

 
கவிதைகளின் மிகப் பெரிய குணமாக நான் கருதுவது உலகத்தை அது வியக்க கற்றுத் தருகிறது. வியத்தல் ஒன்றுதான் அன்றாட வாழ்வின் மீது படிந்திருக்கும் சலிப்புகளை அகற்றுவதாய் திகழ்கிறது. அப்படிப்பட்ட வியக்க வைக்கும் கவிதை வரிகளை வழங்குவதில் வைரமுத்துவுக்கே முதலிடம் என் இதயத்தில்.

 
எனக்கு விருப்பமான வைரமுத்துவின் சில கவிதைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

திரைப்படம்

இருட்டில் காட்டப் படுவதாய்

இருக்கட்டும்!

ஆனால் – அது

வாழ்க்கையின் வெளிச்சத்தில்

எடுக்கப்படட்டும்!


காதலரே காதலரே!

உங்களுக்கு உரைப்பதற்கு

ஒன்றுண்டு

               கனவுப்பயிர் வளரும்

               காதல் நிலத்தை

               வினோபாவைப் போல்...

  பிச்சை விருத்தாந்தத்தால்

  பெறமுடியாது:

  அது

  மார்க்சின் தத்துவத்திற்கே

  மசியும்.



காந்தி மகாத்மா

அப்படியொன்றும் உன்னை

அடியோடு மறக்கவில்லை

அண்ணலே!

இன்னும்

நகரத்து பெண்களிடம்

உனக்கு

நல்ல செல்வாக்கிருக்கிறது!

உன்னை பின்பற்றி

அரையாடை கட்டுவது

அவர்கள்தாம் இப்போது.


கோயில் செய்குவோம்

இன்னும் கொஞ்ச நாளில் –

அத்தனை சட்டசபைகளும்

ஆலயங்கள் ஆகலாம்!

அங்கும்...

செருப்போடு நுழைவது

தடை செய்யப்படலாம்.



காடு

குறிஞ்சியின் குழந்தை!

முடி வெட்டிக் கொள்ளாத

மூத்த பூங்கா!


ஆளுக்கொரு கோப்பை

தேநீர் பருகும் கணங்கள்

சில நிமிடத் திருவிழாக்கள்

பழைய மனைவியின்

முத்தம் போலொரு

சம்பிரதாயமல்ல தேநீர் பருகல்

ஒவ்வொரு மிடறும்

புதிய காதலியின் பசித்தமுத்தம்.

***

திங்கள், 19 ஏப்ரல், 2010

தி வே ஹோம்

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தென் கொரியத் திரைப்படத்தைப் பார்த்தேன். The Way Home என்ற அந்தப் படத்தை இயக்கியவர் ஒரு பெண். பெயர் Lee Jeong Hyang. பாட்டிக்கும் பேரனுக்குமான பாசத்தை பற்றியது படம். படம் பார்க்கத் துவங்கியதும் கண்களில் பரவசமும், படத்தின் முடிவில் நெஞ்சத்தில் வலி ஏற்படுவதும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

 
கணவனைப் பிரிந்த பெண் ஒருத்தி விடுமுறையில் இருக்கும் தன் ஏழு வயது மகனை ஒரு மலைக் கிராமத்தில் தனிமையில் வசிக்கும் தன் அம்மாவின் வீட்டுக்கு முதல் முறையாக அழைத்துச் செல்கிறாள். தனக்கொரு வேலை கிடைக்கும் வரை அவனை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு புறப்பட்டுவிடுகிறாள். நகரத்து சிறுவனான Saang-Woo விற்கு ஆரம்பத்தில் பாட்டியின் மீதும், பாட்டியின் ஊர் மீதும் கொஞ்சமும் விருப்பமில்லை. மெது மெதுவாய் அவனுக்கு பாட்டியின் மீது அன்பு வரத் துவங்குகிறது. இறுதியில் பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்கிறான். இதுதான் அந்தப் படத்தின் கதை. எளிமையாக தோன்றினாலும் அது ஏற்படுத்தும் பாதிப்பு பிரம்மிப்பானது.


ஒரு நாள் Saang-Woo வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் போது பாட்டியின் கைகள் ஊசி நூலுடன் மெல்ல அவனருகே வருகின்றன. மிகுந்த எரிச்சலோடு அவன் ஊசியில் நூலைக் கோர்த்துக் கொடுக்கிறான். அதே Saang-Woo ஊருக்கு திரும்பும் முதல் நாள் இரவு பாட்டிக்காக இருக்கும் ஊசிகளிலெல்லாம் வரிசையாக நூல் கோர்த்து வைக்கும் போது என்னால் அழாமல் இருக்க முடிவதில்லை.


பாட்டி ஒரு நாள் பேரனை அழைத்துக்கொண்டு பேருந்தில் நகரத்து சந்தைக்கு செல்கிறாள். கேட்பதையெல்லாம் வாங்கித்தருகிறாள். மேலும் அவனுக்கு செலவழிக்க பணம் வேண்டுமென்பதால் அவனை மட்டும் பேருந்தில் அனுப்பிவிட்டு கையில் மூட்டையுடன் நடந்தே வருகிறாள். இதைப் பார்த்ததும் Saang-Woo நெகிழ்ந்து போகிறான்.


மேலே சொன்ன இரண்டு காட்சிகளும் பாட்டியின் மீது பேரனும், பேரன் மீது பாட்டியும் கொண்ட பாசத்தின் விஸ்வரூபங்கள்.


படம் முழுக்க நான் அந்த மூதாட்டியின் முகத்தில் பார்த்தது குழந்தையின் கண்கள். சிறுவனின் நடிப்பு இணையற்ற யதார்த்தமான அழகோடு படத்திற்கு வலு சேர்க்கிறது. முடிவில் பேரனை வழியனுப்பிவிட்டு சோகம் ததும்ப அந்த மலைப்பாதை வழியே தீராத தன் தனிமையுடன் பாட்டி நடந்து செல்கிறாள். திரையில் இருள் கவிய எல்லா பாட்டிகளுக்கும் இந்தப் படம் சமர்ப்பணம் எனும் எழுத்துக்களுடன் படம் முடிகிறது.


கோடை காலத்தில் வரும் விடுமுறை நாட்களில்தான் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் வெளியூரில் வசிக்கும் தாத்தா-பாட்டி வீட்டுக்கு அனுப்பப் படுகிறார்கள். அடுத்த தலைமுறையாய் வாழப்போகும் குழந்தைகள் சில விஷயங்களை கற்றுக்கொள்ளவும், கடந்த தலைமுறையாய் வாழ்ந்து முடித்தவர்கள் சில விஷயங்களை கற்றுக்கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிற காலம் அது. இன்றைக்கிருக்கும் பெரியோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அந்த வாய்ப்பு இருப்பதாய் தெரியவில்லை.

***

புதன், 14 ஏப்ரல், 2010

என் பெருங்கனவு

திருவள்ளுவர் மீது தீராத காதல் கொண்டவன் நான். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே திருக்குறள்களை தெரிந்து வைத்திருந்தாலும் மொத்த குறள்களையும் பொருள் சுவையோடு விரல் நுனியில் வைத்திருக்க வேண்டுமென்பது என் பெருங்கனவு. எந்த ஒரு குறளை வாசித்தாலும் அதன் பிரம்மாண்டமும், அழகும், வாழ்வு குறித்த நுட்பமான பதிவுகளும், சொல்லின் சுவையும் புரியத்துவங்குகிறது. என் ஆரம்ப நாட்களில் திருக்குறளை வெறும் அறிவுரை நூலாக மட்டுமே புரிந்து வைத்திருந்தேன். இப்போது போலவே அப்போதும் அறிவுரைகளின் மேல் நம்பிக்கையில்லாததால் திருவள்ளுவர் மீதும் திருக்குறளின் மீது காரணமற்ற கோபமும் அலட்சியமும் இருந்தது. பின்னாளில் அந்த நினைப்பை முதலில் சிதறடித்தது தற்செயலாக நான் படிக்க நேர்ந்த இந்த குறள் தான்:

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின்                                 (280)

கடவுளின் பெயரைச் சொல்லி மொட்டை அடிப்பதும் முடி வளர்ப்பதும் தேவையில்லாதது. உலகம் பழிக்கும் தீயொழுக்கங்களை அழித்துவிட்டாலே போதுமானது என்ற அர்த்தத்தை படித்ததும் திருக்குறளினுள் ஒளிந்திருக்கும் பகுத்தறிவு சிந்தனைகளை தேடத் துவங்கினேன். காரணம் அந்த நாளில் கடவுள் மறுப்பில் தீவிரமாக இருந்தேன்.

என் வாழ்வின் இறுதி வரை நான் கடைபிடிக்க நினைக்கும் இரண்டு முக்கியமான குறள்கள்:

இனிய உளவாக இன்னாத கூறல்

கனியிருப்பக் காய்கவர்ந் தற்று                  (100)



இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண

நன்னயம் செய்து விடல்                             (314)

ஆனால் இன்றைய சூழலில் இவ்விரண்டையும் நடைமுறைப்படுத்துவது அவ்வளவு எளிதில்லை. என்னால் முடிந்தவரை முயற்சித்து வருகிறேன்.

திருவள்ளுவரை ஒரு பாசமிக்க தாத்தாவைப் போல் பார்த்து வந்த எனக்கு திடீரென தோளில் கை போடும் நண்பனாக நெருக்கம் கொள்ளச் செய்தது இந்த வரிகள்தான்:

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்

யாரினும் யாரினும் என்று                        (1314)

யாவரையும் விட உன் மீதுதான் மிகுந்த காதலோடு இருப்பதாய் சொல்கிறான் காதலன். யாவரையும் விட என்றால் அந்த யாவரும் யார் யார் எனக் கேட்டு செல்லமாக கோபம் கொண்டாளாம் காதலி. அசந்தே போனேன்.


திருவள்ளுவரை தெய்வப் புலவராய் ஏற்றுக்கொள்வதை விட மனித வாழ்வின் அத்தனை பக்கங்களையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அலசி ஆராய்ந்து தீர்க்கமான பதில்கள் தந்த ஒரு மாபெரும் விஞ்ஞானியாய் பார்ப்பதற்கே என் மனது விருப்பம் கொள்கிறது.

அவர் மயிலாப்பூரில் பிறந்ததாகவோ, வாசுகி என்ற பெண்ணை மணம் புரிந்ததாகவோ திருக்குறளில் எந்தக் குறிப்பும் இல்லை. அவரைப் பற்றி அறிந்து கொள்வதற்கு வேறு சான்றுகளும் இல்லை. காரணம் அவர் திருக்குறளைத் தவிர வேறு எதையும் விட்டுச்செல்லவில்லை. இருப்பினும் அந்த ஒன்றே இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்பும் அவர் பேர் சொல்லும்.

***

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

ஆக்ஸிஜன் அற்ற அழகி

வெண்ணிலவே வெண்ணிலவே

என்னை வேடிக்கை பார்த்தது போதும் – நீ

கண் சிமிட்டி கை அசைத்தால் – என்

காயங்கள் கொஞ்சம் ஆறும்

உன் களங்கம் இல்லா அழகு – நான்

இரவில் உண்ணும் உணவு

நீ சட்டென்று மறையும் பொழுது – என்

கண்களில் குறையும் கனவு



மோகம் வந்த போது – உன்

தேகம் மறையவில்லை – அட

மேகம் வந்த போது – அது

பட்டென்று மறைந்ததடி

மீண்டும் உன்னை காண – என்

கண்கள் ஏங்கும் பொழுது – நீ

நீந்திக்கொண்டு வருவாய் – உன்

தடைகளை உடைத்தபடி



வானுக்கும் பூமிக்கும் பாலம் வகிப்பவளே – நான்

ஏங்கவும் பின் தூங்கவும் ஒரு பாதை வகுத்தவளே

ஆக்ஸிஜன் அற்ற அழகி – நீ

அஹிம்சை கொஞ்சம் பழகி

மனதை மெதுவாய் வருடி – என்னை

முழுதாய் திருடு திருடி...



ஒரு அமாவாசை இரவில் நான் எழுதிய பாடலிது. இந்தப்   பாடல் பிடித்திருந்தால் மீண்டும் ஒரு முறை படித்துப்பாருங்கள் இல்லையென்றால் கீழ்கண்ட ட்யூனில் பாடிப்பாருங்கள். அப்போதும் பிடிக்காதவர்கள் வைரமுத்துவிடம் மட்டும் சொல்லிவிடாதீர்கள்.

பாடல் : மெல்லினமே மெல்லினமே.....
படம் : ஷாஜஹான்
இசை : மணிஷர்மா
***

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

அறுபதுகளின் பாடல்

என் பெரும்பான்மையான இரவுகளில் உறக்கம் வரும்வரை பழைய பாடல்களைதான் கேட்டுக்கொண்டிருப்பேன். பதின் வயதுகளின் முடிவில்தான் பழைய பாடல்களின் மீதான ஈர்ப்பு அதிகமானது. அதிலும் குறிப்பாக டி.எம்.எஸ் குரலில் உண்டான மயக்கம் இன்று வரை தீரவேயில்லை. காதல் சோகம் பக்தி தத்துவம் இப்படி அவர் எதைப் பாடிக் கேட்டாலும் மனதை கரைப்பதாகவே உள்ளது. அதுப்போலவே பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா மற்றும் ஏ.எம்.ராஜாவின் பாடல்களும் வசீகரம் குறையாதவை. பழைய பாடல்களை தேடித் தேடி கேட்டுக்கொண்டிருந்த நாட்களில் என்னை பெரிதும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது அந்த பாடல்களின் எளிமையான இசையும் வரிகளும்தான். எனக்கு இசைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் சில நேரங்களில் இசை மிகத் தேவையானதாக உள்ளது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல்கள்தான் மனதில் தோன்றும் வெறுமையை நூறு சதவீத பூர்த்தி செய்கிறது. பிற இசையமைப்பாளர்களில் கே.வி. மகாதேவனும் வி. குமாரும் என் ரசனைக்குரியவர்கள். சில பாடல்களை எதற்காக திரும்பத் திரும்ப கேட்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. அப்படி கேட்கும் பாடல்களில் ஒன்றுதான் சர்வர் சுந்தரம் படத்தில் வரும் அவளுக்கென்ன அழகிய முகம்..!. அதை கேட்கையில் உடலில் என்னவோ செய்கிறது. எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதேயில்லை. எனக்கு மிகவும் விருப்பமான எம்.எஸ்.வி., கண்ணதாசன், டி.எம்.எஸ். மற்றும் நாகேஷ் ஆகிய நால்வரின் கூட்டணியில் அமைந்த அற்புதமான துள்ளிசை பாடல். எப்போது கேட்டாலும் மீன்தொட்டிக்குள் நீந்தும் மீன்கள் போல மனது துள்ளலும் உற்சாகமும் கொண்டுவிடுகிறது. எனது செல்போன் ரிங்டோனும் இந்தப் பாடல்தான்.


பழைய பாடல்கள் என்றில்லை பொதுவாக எந்தவொரு இசையாயிருந்தாலும் அதனுள் பிரவேசம் செய்வதற்கென்று ஒரு மனத்தருணம் வேண்டியிருக்கிறது. அது ஏற்பட்டாலொழிய என் அருகில் உலகின் சிறந்த இசை ஒலித்துக்கொண்டிருந்தாலும் அது என்னுள் செல்வதேயில்லை என்பதுதான் உண்மை.

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

அனுப்பாக் கடிதம்

கடிதம் வெறும் பரிமாற்றம் இல்லை. நாம் இன்னொருவரை நேசிக்கிறோம் என்பதன் சாட்சி. நேர் பேச்சில் சொல்ல முடியாததை எழுத்தில் சொல்ல முடியும். ஒரு வகையில் கடிதம் நம் மனதின் குரல். ஒவ்வொருவர் மனதிலும் எழுத நினைத்து எழுதாமல் போன கடிதங்கள் இருக்கின்றன. அது போலவே எழுதி முடித்து அனுப்பாமல் போன கடிதங்களும் ஒன்றிரண்டாவது நிச்சயம் இருக்கக்கூடும். அப்படி அனுப்பாத கடிதம் ஒன்று என்னிடமும் உள்ளது. அதுதான் நான் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எழுதிய இந்தக் கடிதம்.

அன்புள்ள ரஜினிகாந்த்,

என் வாழ்நாளில் எப்படியும் பார்த்தாகவேண்டும் என எழுதி வைத்திருக்கும் பெயர்களுள் உங்கள் பெயரும் ஒன்று.

உங்கள் மீது எனக்கு பற்றோ பக்தியோ இல்லை. மாறாக நான் கொண்டிருப்பதெல்லாம் ஒருவித ஈர்ப்பு. அதைத் தவிர வேறில்லை.

இன்று ஓரளவு விபரம் தெரிந்தும் கூட தரையில் கால் படாமல் திரையில் நீங்கள் சண்டை போடுவதை கண்கள் இமைக்காமல் பார்த்து ரசித்து கைகள் தட்டுகிறேன்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீங்கள்தான்.

சிகரெட் இல்லாத ரஜினியையும் ரசிக்க முடியும் என்று சமீபத்திய படங்களில் நிரூபித்தீர்கள். சபாஷ்.

ஒன்று மட்டும் சொல்லுங்கள் ரஜினி. ஓடும் வேகத்தில் நடப்பதற்கு எங்கு பழகுநீர்கள்? உங்கள் சுறுசுறுப்பு சுட்டுப்போட்டாலும் யாருக்கும் வராது.

இமயமலை என்றதும் டென்சிங்கின் பெயரை விட உங்கள் பெயர்தான் எல்லோரது மனதிலும் எழுகிறது. உங்கள் பனிமலை பயணம் தொடர என் வாழ்த்துக்கள்.

என் உள்ளுணர்வு சொல்கிறது நிச்சயம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் என்று. ஆனால் நான் எதிர்ப்பார்த்து கிடப்பது உங்கள் அரசியல் பிரவேசத்தை அல்ல. ஆண்டுக்கு ஒரு படம். அவ்வளவுதான்.

பின் குறிப்பு:

அடுத்த முறை இமயமலை செல்லும் போது ஈ-மெயில் அனுப்புங்கள். நானும் வருகிறேன்.
                                                              ***

சொர்க்க தரிசனம்

நேற்றிரவு ‘’சாலையை கடக்கும் குழந்தை’’ எனும் தலைப்பில் வார இதழொன்றில் வெளிவந்த நாவிஷ் செந்தில்குமாரின் கவிதையை வாசித்தேன். படித்து முடித்ததும் குழந்தைகளின் மீதான அன்பும் அக்கறையும் பெருகத்துவங்கியது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு குழந்தையை கைப்பிடித்து கூட்டிக்கொண்டு உலாப்போகும் ஆசையில் மனதும் ஏங்கத்துவங்கியது. குழந்தைகளை வெறும் தொல்லைகளாகவே மட்டும் பார்ப்பவர்களுக்கு இக்கவிதை சிறிதளவாவது அவர்களின் மீது விருப்பத்தை ஏற்படுத்தக்கூடும். போராட்டமும் அவசரமும் நிறைந்த வீட்டில் குழந்தைகள் ஆனந்தமாகவும் பொறுப்பாகவும் வளர வாய்ப்பில்லை என்று யாரோ எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு வீட்டில் குழந்தை பிறக்கிறதென்றால் வாழ்க்கை குறித்து நாம் கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு அது. அவர்கள் உணர்த்தும் பாடங்கள் அற்புதமானவை. அதை விளக்கிச் சொல்வது அவ்வளவு எளிது இல்லை.

இதோ அந்தக் கவிதை:

ஒரு குழந்தை

சாலையைக் கடக்க

உதவக் கோரினால்

சட்டென்று செயல்படாதீர்கள்.

சிறு மலரை

உள்ளங்கையில் வைத்து

விரல்களை குவித்து

மூடித் திறக்கையில்

இதழ்கள் கசங்கவில்லை

என்றால் மட்டுமே

அதன் கரங்களை பற்றுங்கள்.

கடக்கும்போது

எதிர்ப்புரத்தை அடைவதில்

அவசரம் காட்டாதீர்கள்

வாகனத்தில் வருபவர்களையும்

காத்திருக்கச்சொல்லுங்கள்.

மறுமுனையை அடைந்ததும்

‘இனி நீயாக போய்விடு’

என்று சொல்லிக்

கிளம்பிவிடாதீர்கள்.

பள்ளி வரையோ

வீடு வரையோ அழைத்தால்

போய் வாருங்கள்.

அலுவலகத்துக்கு

நேரமாகிவிட்டதாகவோ

இதர வேலைகள் இருப்பதாகவோ

துளியும்

காட்டிக்கொள்ளாதீர்கள்

எவ்வளவு நேரமானாலும்

விடைபெறும் முடிவைக்

குழந்தையிடமே விட்டுவிடுங்கள்.

உங்கள் வயதை

அனுபவத்தை

முடியும் வரை குறைத்துவிடுங்கள்

அதற்குத் தெரிந்த கதைகளை

அதன் மொழியில்

அப்படியே சொல்லவிடுங்கள்

இடையிடையே

‘ம்ம் .. ம்ம் ..” என்று சொல்லுங்கள் .

விண்மீன்கள்தான் எனக்கு

விளையாட்டுப் பொருட்கள்

எனச் சொன்னால்

உடைந்த அல்லது

பழையதாய் ஒன்றை

அதனிடமிருந்து

கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் .

சில முத்தங்களை கொடுத்தால்

எச்சிலை துடைத்துவிடாதீர்கள்

காய்வதற்குள் வீடு வந்து

நாட்குறிப்பில்

‘சொர்க்கத்தை தரிசித்த தினம்’

என மறக்காமல்

குறித்துவைத்துக்கொள்ளுங்கள்!