கல்லூரி நாட்களில் எழுதிய காதல் கடிதம் ஒன்று என் ஞாபக அலமாரியில் தூசி படிந்து கிடந்தது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரும்பவும் எடுத்து படித்துப் பார்த்ததில் தும்மலோடு சிறு துக்கமும் தொற்றிக் கொண்டது. அந்த வலி கொண்ட வரிகள் இதோ...
என் எதிர்காலம் நீயென முடிவு செய்து சரணடைய வந்தவனிடம் சிற்றதிர்ச்சியும் காட்டாமல் நீயிருந்ததில் பேரதிர்ச்சி கொண்டவன் நான்.
பார்த்த முதல் நாளே காதலை சொல்லிவிட்டு பதிலுக்காக ஐந்தாவது ஆண்டில் அலைந்து கொண்டிருக்கிறேன்.
முதன் முதலாக விரும்பி பார்த்த போது திரும்பி பார்த்தாய். அதோடு சரி. திரும்ப பார்க்கவே இல்லையே.
நீ அழகானவள். அறிவானவள். கடவுள் நம்பிக்கை இல்லாதவள். இந்த மூன்றாவது விஷயத்தில் மட்டும் இரண்டு பேரும் ஒன்றுபட்டிருப்பதில் சின்னதாய் ஒரு சந்தோஷம்.
நம் இருவரின் இடையே உள்ள இடைவெளியை கண்டறிவதற்கு கருவிகள் ஏதும் இல்லாதது கவலை கொள்ள வைக்கிறது கண்மணி.
நீ விசாலமானவள் - உன்னைக்காண
விசேஷ கண்கள் தேவை.
கேட்டேன்.
நீயும் கொடுத்தாய்.
அடிப்பாவி!
கண்களை கொடுத்து – அதன்
கார்னியாக்களை ஏனடி பறித்தாய்?
உன்னைப் பார்த்து ஐ லவ் யூ சொன்னவர்களை விடவும் சொல்லத் துடிப்பவர்கள் அதிகம் என்பது எனக்கு தெரியாமல் இல்லை. ஆனபோதும் உன் மீதான என் நேசம் துளியும் குறைந்து போவது இல்லை.
உனக்குத்தான் எத்தனை கிளைகள்? அதில் எத்தனை இலைகள்? ஒரு பகுதியையாவது படிக்கும் தகுதியை எனக்கு கொடு.
என் மூளையின் முழுப் பகுதியையும் உனக்காக அளிக்கிறேன். நீயோ முகத்தில் அமிலத்தை அல்லவா அள்ளித் தெளிக்கிறாய்.
உன்னை புரிந்து கொள்ளும் ஆர்வத்தில் பாசத்தோடு பூக்கள் நீட்டும் போதெல்லாம் ஏனடி பெண்ணே பெட்ரோல் ஊற்றப் பார்க்கிறாய்?
உண்மை தெரியுமா சிநேகிதி! உன்னைப் பற்றி சிந்தித்தே என் சிவப்பணுக்கள் பாதி சிவப்பிழந்து விட்டன.
பல மொழிகள் உன்னை விவரித்தும் ஒன்றில் கூட எனக்கு நீ விளங்கவில்லையே. நீ விளங்க முடியா கவிதை என்பது மட்டும் விளங்குகிறது.
நீ விஞ்ஞானிகளிடம் விடையாய் இருக்கிறாய். மெய்ஞானிகளிடம் விடைப் பெற்றிருக்கிறாய். என்னை ஒரு மெய்விஞ்ஞானி ஆக்குவது எப்போது?
உலகம் உயிர் வாழ
உந்து சக்தியாய் இருக்கும்
ஏ! உயிர் வேதியலே – என்
உயிர் வாங்காதே...
***
