வெள்ளி, 9 ஏப்ரல், 2010

அறுபதுகளின் பாடல்

என் பெரும்பான்மையான இரவுகளில் உறக்கம் வரும்வரை பழைய பாடல்களைதான் கேட்டுக்கொண்டிருப்பேன். பதின் வயதுகளின் முடிவில்தான் பழைய பாடல்களின் மீதான ஈர்ப்பு அதிகமானது. அதிலும் குறிப்பாக டி.எம்.எஸ் குரலில் உண்டான மயக்கம் இன்று வரை தீரவேயில்லை. காதல் சோகம் பக்தி தத்துவம் இப்படி அவர் எதைப் பாடிக் கேட்டாலும் மனதை கரைப்பதாகவே உள்ளது. அதுப்போலவே பி.பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா மற்றும் ஏ.எம்.ராஜாவின் பாடல்களும் வசீகரம் குறையாதவை. பழைய பாடல்களை தேடித் தேடி கேட்டுக்கொண்டிருந்த நாட்களில் என்னை பெரிதும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது அந்த பாடல்களின் எளிமையான இசையும் வரிகளும்தான். எனக்கு இசைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் சில நேரங்களில் இசை மிகத் தேவையானதாக உள்ளது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல்கள்தான் மனதில் தோன்றும் வெறுமையை நூறு சதவீத பூர்த்தி செய்கிறது. பிற இசையமைப்பாளர்களில் கே.வி. மகாதேவனும் வி. குமாரும் என் ரசனைக்குரியவர்கள். சில பாடல்களை எதற்காக திரும்பத் திரும்ப கேட்கிறேன் என்று எனக்கே புரியவில்லை. அப்படி கேட்கும் பாடல்களில் ஒன்றுதான் சர்வர் சுந்தரம் படத்தில் வரும் அவளுக்கென்ன அழகிய முகம்..!. அதை கேட்கையில் உடலில் என்னவோ செய்கிறது. எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதேயில்லை. எனக்கு மிகவும் விருப்பமான எம்.எஸ்.வி., கண்ணதாசன், டி.எம்.எஸ். மற்றும் நாகேஷ் ஆகிய நால்வரின் கூட்டணியில் அமைந்த அற்புதமான துள்ளிசை பாடல். எப்போது கேட்டாலும் மீன்தொட்டிக்குள் நீந்தும் மீன்கள் போல மனது துள்ளலும் உற்சாகமும் கொண்டுவிடுகிறது. எனது செல்போன் ரிங்டோனும் இந்தப் பாடல்தான்.


பழைய பாடல்கள் என்றில்லை பொதுவாக எந்தவொரு இசையாயிருந்தாலும் அதனுள் பிரவேசம் செய்வதற்கென்று ஒரு மனத்தருணம் வேண்டியிருக்கிறது. அது ஏற்பட்டாலொழிய என் அருகில் உலகின் சிறந்த இசை ஒலித்துக்கொண்டிருந்தாலும் அது என்னுள் செல்வதேயில்லை என்பதுதான் உண்மை.

செவ்வாய், 6 ஏப்ரல், 2010

அனுப்பாக் கடிதம்

கடிதம் வெறும் பரிமாற்றம் இல்லை. நாம் இன்னொருவரை நேசிக்கிறோம் என்பதன் சாட்சி. நேர் பேச்சில் சொல்ல முடியாததை எழுத்தில் சொல்ல முடியும். ஒரு வகையில் கடிதம் நம் மனதின் குரல். ஒவ்வொருவர் மனதிலும் எழுத நினைத்து எழுதாமல் போன கடிதங்கள் இருக்கின்றன. அது போலவே எழுதி முடித்து அனுப்பாமல் போன கடிதங்களும் ஒன்றிரண்டாவது நிச்சயம் இருக்கக்கூடும். அப்படி அனுப்பாத கடிதம் ஒன்று என்னிடமும் உள்ளது. அதுதான் நான் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு எழுதிய இந்தக் கடிதம்.

அன்புள்ள ரஜினிகாந்த்,

என் வாழ்நாளில் எப்படியும் பார்த்தாகவேண்டும் என எழுதி வைத்திருக்கும் பெயர்களுள் உங்கள் பெயரும் ஒன்று.

உங்கள் மீது எனக்கு பற்றோ பக்தியோ இல்லை. மாறாக நான் கொண்டிருப்பதெல்லாம் ஒருவித ஈர்ப்பு. அதைத் தவிர வேறில்லை.

இன்று ஓரளவு விபரம் தெரிந்தும் கூட தரையில் கால் படாமல் திரையில் நீங்கள் சண்டை போடுவதை கண்கள் இமைக்காமல் பார்த்து ரசித்து கைகள் தட்டுகிறேன்.

பெண்களைத் தவிர என் கனவில் வரும் ஒரே ஆண் நீங்கள்தான்.

சிகரெட் இல்லாத ரஜினியையும் ரசிக்க முடியும் என்று சமீபத்திய படங்களில் நிரூபித்தீர்கள். சபாஷ்.

ஒன்று மட்டும் சொல்லுங்கள் ரஜினி. ஓடும் வேகத்தில் நடப்பதற்கு எங்கு பழகுநீர்கள்? உங்கள் சுறுசுறுப்பு சுட்டுப்போட்டாலும் யாருக்கும் வராது.

இமயமலை என்றதும் டென்சிங்கின் பெயரை விட உங்கள் பெயர்தான் எல்லோரது மனதிலும் எழுகிறது. உங்கள் பனிமலை பயணம் தொடர என் வாழ்த்துக்கள்.

என் உள்ளுணர்வு சொல்கிறது நிச்சயம் நீங்கள் அரசியலுக்கு வருவீர்கள் என்று. ஆனால் நான் எதிர்ப்பார்த்து கிடப்பது உங்கள் அரசியல் பிரவேசத்தை அல்ல. ஆண்டுக்கு ஒரு படம். அவ்வளவுதான்.

பின் குறிப்பு:

அடுத்த முறை இமயமலை செல்லும் போது ஈ-மெயில் அனுப்புங்கள். நானும் வருகிறேன்.
                                                              ***

சொர்க்க தரிசனம்

நேற்றிரவு ‘’சாலையை கடக்கும் குழந்தை’’ எனும் தலைப்பில் வார இதழொன்றில் வெளிவந்த நாவிஷ் செந்தில்குமாரின் கவிதையை வாசித்தேன். படித்து முடித்ததும் குழந்தைகளின் மீதான அன்பும் அக்கறையும் பெருகத்துவங்கியது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு குழந்தையை கைப்பிடித்து கூட்டிக்கொண்டு உலாப்போகும் ஆசையில் மனதும் ஏங்கத்துவங்கியது. குழந்தைகளை வெறும் தொல்லைகளாகவே மட்டும் பார்ப்பவர்களுக்கு இக்கவிதை சிறிதளவாவது அவர்களின் மீது விருப்பத்தை ஏற்படுத்தக்கூடும். போராட்டமும் அவசரமும் நிறைந்த வீட்டில் குழந்தைகள் ஆனந்தமாகவும் பொறுப்பாகவும் வளர வாய்ப்பில்லை என்று யாரோ எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு வீட்டில் குழந்தை பிறக்கிறதென்றால் வாழ்க்கை குறித்து நாம் கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு அது. அவர்கள் உணர்த்தும் பாடங்கள் அற்புதமானவை. அதை விளக்கிச் சொல்வது அவ்வளவு எளிது இல்லை.

இதோ அந்தக் கவிதை:

ஒரு குழந்தை

சாலையைக் கடக்க

உதவக் கோரினால்

சட்டென்று செயல்படாதீர்கள்.

சிறு மலரை

உள்ளங்கையில் வைத்து

விரல்களை குவித்து

மூடித் திறக்கையில்

இதழ்கள் கசங்கவில்லை

என்றால் மட்டுமே

அதன் கரங்களை பற்றுங்கள்.

கடக்கும்போது

எதிர்ப்புரத்தை அடைவதில்

அவசரம் காட்டாதீர்கள்

வாகனத்தில் வருபவர்களையும்

காத்திருக்கச்சொல்லுங்கள்.

மறுமுனையை அடைந்ததும்

‘இனி நீயாக போய்விடு’

என்று சொல்லிக்

கிளம்பிவிடாதீர்கள்.

பள்ளி வரையோ

வீடு வரையோ அழைத்தால்

போய் வாருங்கள்.

அலுவலகத்துக்கு

நேரமாகிவிட்டதாகவோ

இதர வேலைகள் இருப்பதாகவோ

துளியும்

காட்டிக்கொள்ளாதீர்கள்

எவ்வளவு நேரமானாலும்

விடைபெறும் முடிவைக்

குழந்தையிடமே விட்டுவிடுங்கள்.

உங்கள் வயதை

அனுபவத்தை

முடியும் வரை குறைத்துவிடுங்கள்

அதற்குத் தெரிந்த கதைகளை

அதன் மொழியில்

அப்படியே சொல்லவிடுங்கள்

இடையிடையே

‘ம்ம் .. ம்ம் ..” என்று சொல்லுங்கள் .

விண்மீன்கள்தான் எனக்கு

விளையாட்டுப் பொருட்கள்

எனச் சொன்னால்

உடைந்த அல்லது

பழையதாய் ஒன்றை

அதனிடமிருந்து

கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் .

சில முத்தங்களை கொடுத்தால்

எச்சிலை துடைத்துவிடாதீர்கள்

காய்வதற்குள் வீடு வந்து

நாட்குறிப்பில்

‘சொர்க்கத்தை தரிசித்த தினம்’

என மறக்காமல்

குறித்துவைத்துக்கொள்ளுங்கள்!