சனி, 5 மார்ச், 2011

மீசை முளைத்த ஆசைகள்

          நிறைய பேர் மீது எனக்கு பொறாமையுள்ளது. அதிலும் பாரதி மீது கொண்ட பொறாமை அளவில்லாதது, நரைத்து விடும் முன்பே மரித்துப் போனாலும் தமிழை தனக்கு கடன் பட வைத்த ஒரு மகாகவி. தான் கொண்ட திமிரை தானே ரசித்தவன் பாரதி. அவன் திமிர் அவன் மனசாட்சி. அது சுயநலமற்றது. முற்போக்கு சிந்தனைகளாலானது. சமரசங்களுக்கு அப்பாற்பட்டது. வணங்கும் தெய்வத்திடம் கூட தன் தேவைகளை திமிராய் கேட்டவன். பகைவனுக்கும் அருளச்சொன்னவன். சுதந்திர தாகத்தை தணித்தவன். காற்று வெளியினில் காதலை எண்ணிக் களித்தவன். சின்னஞ்சிறு பாப்பாக்களுக்கும் சிந்து படித்தவன். எவனொருவனும் பாரதி மீது ப்ரியம் கொள்ள இவைகளே போதுமானது.

          தொடர்ந்து சில நாட்களாக பாரதியின் சில பாடல்களை திரும்பத் திரும்ப வாசித்ததில் ஒரு விபரீத ஆசை முளைத்தது. என் ஆசைகள் சிலவற்றை அவன் போல் எழுதிப் பார்க்க வேண்டுமென்று.  ஏதோ எழுதியும் விட்டேன். அவ்வாசைகள் அனைத்தும் நிறைவேற்றப் பட முடியாததுதான். ஆனாலும் நிஜமானது.


வான்புகழ் கொண்ட வள்ளுவவரிகளை
வாழ்க்கைப்படுத்தவொரு ஆசை

தேன்தமிழிலக்கியக்கடலில் நானொரு
பெண்துணையோடு நல்ல நீச்சல் பழகவொரு ஆசை

பாரதித் திமிருடன் பாரினில் நடந்திட ஆசை

பார்வையில் படும் ஒரு யானையை இரு கையில்
தூக்கிவைத்து கொஞ்ச ஆசை

மழலையராடிடும் விளையாட்டில் கலந்து கொண்டு
துளி வெட்கமானமின்றி தோற்றுப்போகவொரு ஆசை

நெஞ்சில் வஞ்சங்கொண்டு நித்தம் பேசுமொரு கூட்டம்
நடுவில் நின்று யுத்தம் புரியவொரு ஆசை

பொய்யான நம்பிக்கையை பூமி தன்னில் ஒரு
பெரிய குழித்தோண்டி போட்டுப் புதைக்கவொரு ஆசை


பயிர்கள் வாடி நின்றால் மொத்த மேகத்தையும்
போட்டுப் பிழிந்தெடுத்து மழையை பொழிய வைக்க ஆசை

உள்ளம் சொல்லும் ஒரு உயரம் நோக்கிச் செல்ல
நோய்கள் ஏதுமில்லாவுடலை உறுதி செய்ய ஆசை


பின் குறிப்பு:  இதில் பிழையேதுமிருந்தால் பொறுத்தருள வேண்டாம்.

***