புதன், 13 ஜூலை, 2011

டைரிக் குறிப்புகள்

டைரி எழுதும் பழக்கம் என்னிடம் இல்லையென்ற போதும் எழுத வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் துளிர் விட்டபடியே உள்ளது. டைரி எழுதுவதென்பது ஒரு தனி மனித தினசரி வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை அல்லது முக்கியமெனத் தோன்றும் சில நினைவுகளை உயிர்ப்புடன் ஒளிவு மறைவின்றி தன் கையெழுத்தில் பதிதலே ஆகும். அப்படி எழுதப் படும் டைரிகளில் தான் வாழ்வின் சுவடுகள் பதிந்திருக்கும். உட்கார்ந்துகொண்டு ஒரு நாளின் நினைவுகளை நினைவு படுத்தி எழுதுவதும் யோகப்பயிற்சிதான். எழுதுவதைவிட எழுதியவற்றை திரும்ப படித்துப் பார்ப்பது மிகுந்த உற்சாகத்தை தரக்கூடியது. அது தன்னை தானறிந்து கொள்ளுதல் போலாகும். நமது எண்ணங்களை பிரதிபலித்து காட்டும் கண்ணாடி - டைரிகள்.

நவீன தமிழ் இலக்கியத்தின் பிரதான படைப்பாளியான ஜெயமோகனின் “தேவகி சித்தியின் டைரி” என்னை கலங்கடித்த சிறுகதைகளில் ஒன்று. தான் டைரி எழுதுவது வீட்டிற்கு தெரியவர, கணவன் உட்பட புகுந்த வீட்டிலுள்ள எவரும் படித்துவிடக் கூடாதென்பதற்காக அதை எரித்துவிட்டு தன் திருமண வாழ்வையே தொலைத்து நின்ற ஒரு பெண்ணின் அழுத்தம் தான் கதை. மனதில் பட்டதை தவிர அதில் தவறாக ஒன்றுமே எழுதவில்லை என்று தன் தாலி மீது சத்தியம் செய்தும் அவளை யாரும் நம்ப மறுக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு அப்படி என்ன ரகசியம் வேண்டிக்கிடக்கிறது என்று அவளை அடிக்கவும் செய்கிறான் அவளது கணவன். தனது அந்தரங்கத்தன்மை மதிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறாள். கெஞ்சுகிறாள். அதற்காக போராடுகிறாள். முடிவில் தோற்றுப் போகிறாள். அதில் அப்படியென்ன அவள் எழுதிவைத்திருந்தாள் என்பதைவிட டைரியின் சுபாவமே ரகசியக்காப்புத்தன்மையோடு விளங்குவது தான் என்பது ஏன் ஒருவர்க்கும் தெரியாமல் போனது என்று யோசித்தபடியே இருக்கிறேன். மிகுந்த நெருக்கத்திற்குரியவரே ஆனாலும் எழுதியவர் அனுமதியின்றி ஒருவரது டைரியை இன்னொருவர் படிப்பது நியாயம் மீறிய செயலாகும். ஒரு வகை அத்துமீறல் என்று கூட சொல்லலாம்.

நிழல்கள் ஒளிந்து கொள்ள உடலைத் தவிர வேறிடமில்லை. அதுபோல் நினைவுகளை ஒளித்து வைக்க டைரியைப் போன்று வேறெதுமில்லை.

***



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக