இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தென் கொரியத் திரைப்படத்தைப் பார்த்தேன். The Way Home என்ற அந்தப் படத்தை இயக்கியவர் ஒரு பெண். பெயர் Lee Jeong Hyang. பாட்டிக்கும் பேரனுக்குமான பாசத்தை பற்றியது படம். படம் பார்க்கத் துவங்கியதும் கண்களில் பரவசமும், படத்தின் முடிவில் நெஞ்சத்தில் வலி ஏற்படுவதும் தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.
கணவனைப் பிரிந்த பெண் ஒருத்தி விடுமுறையில் இருக்கும் தன் ஏழு வயது மகனை ஒரு மலைக் கிராமத்தில் தனிமையில் வசிக்கும் தன் அம்மாவின் வீட்டுக்கு முதல் முறையாக அழைத்துச் செல்கிறாள். தனக்கொரு வேலை கிடைக்கும் வரை அவனை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு புறப்பட்டுவிடுகிறாள். நகரத்து சிறுவனான Saang-Woo விற்கு ஆரம்பத்தில் பாட்டியின் மீதும், பாட்டியின் ஊர் மீதும் கொஞ்சமும் விருப்பமில்லை. மெது மெதுவாய் அவனுக்கு பாட்டியின் மீது அன்பு வரத் துவங்குகிறது. இறுதியில் பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்கிறான். இதுதான் அந்தப் படத்தின் கதை. எளிமையாக தோன்றினாலும் அது ஏற்படுத்தும் பாதிப்பு பிரம்மிப்பானது.
ஒரு நாள் Saang-Woo வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும் போது பாட்டியின் கைகள் ஊசி நூலுடன் மெல்ல அவனருகே வருகின்றன. மிகுந்த எரிச்சலோடு அவன் ஊசியில் நூலைக் கோர்த்துக் கொடுக்கிறான். அதே Saang-Woo ஊருக்கு திரும்பும் முதல் நாள் இரவு பாட்டிக்காக இருக்கும் ஊசிகளிலெல்லாம் வரிசையாக நூல் கோர்த்து வைக்கும் போது என்னால் அழாமல் இருக்க முடிவதில்லை.
பாட்டி ஒரு நாள் பேரனை அழைத்துக்கொண்டு பேருந்தில் நகரத்து சந்தைக்கு செல்கிறாள். கேட்பதையெல்லாம் வாங்கித்தருகிறாள். மேலும் அவனுக்கு செலவழிக்க பணம் வேண்டுமென்பதால் அவனை மட்டும் பேருந்தில் அனுப்பிவிட்டு கையில் மூட்டையுடன் நடந்தே வருகிறாள். இதைப் பார்த்ததும் Saang-Woo நெகிழ்ந்து போகிறான்.
மேலே சொன்ன இரண்டு காட்சிகளும் பாட்டியின் மீது பேரனும், பேரன் மீது பாட்டியும் கொண்ட பாசத்தின் விஸ்வரூபங்கள்.
படம் முழுக்க நான் அந்த மூதாட்டியின் முகத்தில் பார்த்தது குழந்தையின் கண்கள். சிறுவனின் நடிப்பு இணையற்ற யதார்த்தமான அழகோடு படத்திற்கு வலு சேர்க்கிறது. முடிவில் பேரனை வழியனுப்பிவிட்டு சோகம் ததும்ப அந்த மலைப்பாதை வழியே தீராத தன் தனிமையுடன் பாட்டி நடந்து செல்கிறாள். திரையில் இருள் கவிய எல்லா பாட்டிகளுக்கும் இந்தப் படம் சமர்ப்பணம் எனும் எழுத்துக்களுடன் படம் முடிகிறது.
கோடை காலத்தில் வரும் விடுமுறை நாட்களில்தான் வீட்டில் இருக்கும் பிள்ளைகள் வெளியூரில் வசிக்கும் தாத்தா-பாட்டி வீட்டுக்கு அனுப்பப் படுகிறார்கள். அடுத்த தலைமுறையாய் வாழப்போகும் குழந்தைகள் சில விஷயங்களை கற்றுக்கொள்ளவும், கடந்த தலைமுறையாய் வாழ்ந்து முடித்தவர்கள் சில விஷயங்களை கற்றுக்கொடுக்கவும் வாய்ப்பு இருக்கிற காலம் அது. இன்றைக்கிருக்கும் பெரியோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் அந்த வாய்ப்பு இருப்பதாய் தெரியவில்லை.
***

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக