வெளியூர் பயண சமயங்களில் பேருந்தில் ஏறுவதற்கு முன்பு மனது இரண்டு விஷயங்களுக்காக ஏங்கத் துவங்கும். ஒன்று ஜன்னலோர இருக்கை கிடைக்க வேண்டுமென்று மற்றொன்று எண்பதுகளில் வெளிவந்த இளையராஜாவின் பாடல்கள் ஒலிக்கவேண்டுமென்று. இரண்டுமே அமைந்து விட்டால் என் வரையில் அது ஒரு உல்லாச பயணம். எதிர்காற்று முகத்தில் அடித்தபடியே, கண்ணில் இருந்து ஓடி மறையும் மரங்களை வேடிக்கை பார்த்தபடியே இசைஞானியின் பாடல்களை கேட்பது அலாதியானது. கேட்பவர் யாவர் மனதையும் பரவசம் கொள்ளச் செய்யும் மாயம் கொண்டது.
இளையராஜாவின் பாடல்கள் மீது நெருக்கம் கொள்ள வைத்தது பள்ளி விடுமுறையின் போது மேற்கொண்ட ஒரு பேருந்து பயணம்தான். அதற்கு முன்பு அவரது பாடல்கள் மீது நெருக்கம் கொண்டதாய் நினைவே இல்லை. ஆனால் அந்த நாள் தொடங்கி இன்று வரை நான் இளையராஜாவின் ரசிகனாய் இருந்து வருகிறேன். இசைஞானியின் மெல்லிசைப் பாடல்களை மனமொன்றி ரசித்துக் கிடந்தால் அதன் பேர் கூட தியானம் என்றே சொல்வேன்.
எல்லோரது மனதிலும் இளையராஜா பாடல்களின் விருப்பப் பட்டியல் ஒன்று நிச்சயம் இருக்கும். அப்படி நான் கொண்டிருக்கும் பட்டியலில் எப்போதும் முதல் ஐந்து இடத்தில் இருப்பவை.
வெள்ளை புறா ஒன்று....
புஞ்சையுண்டு நஞ்சையுண்டு....
இளைய நிலா பொழிகிறதே....
ஒரு தங்க ரதத்தில்....
ஈரமான ரோஜாவே....
எவரேனும் என்னிடம் இளையராஜா பற்றி சிறு குறிப்பொன்று வரையச் சொன்னால் இப்படித்தான் எழுதித் தருவேன்.
கிராமத்து கீதங்கள் கேட்டு வளர்ந்து, கர்நாடக சங்கீதத்தின் சூட்சுமங்கள் தெரிந்து கொண்டு, மேற்கத்திய சங்கீதமும் கற்றுக் கொண்டு எண்பதுகளின் தமிழ்த் திரை உலகை தன் ஆர்மோனியத்தால் ஆட்சி செய்த ஒரு இசைப்பேரரசன்.
***

அருமையான சிந்தனை. முதிர்ந்த எழுத்து நடை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதோழரே. . .
பதிலளிநீக்குஇளையராஜாவைப் பற்றிய கருத்தோடு மட்டுமல்ல
தாங்கள் குறிப்பிடும் ஐந்து பாடல்களோடும் கூட பொருந்திவருகிறது எனது எண்ணம். ஒற்ற அலைவரிசையில் உற்ற வலைப்பூவர். ..
வாழ்த்துக்களோடு. . .
புதுவைப்பிரபா