வேறொரு தகவலுக்காக இணையத்தில் அலைந்து கொண்டிருந்தபோது தற்செயலாக படிக்கக் கிடைத்தது Khalil Gibran ன் Song of the Flower எனும் கவிதை. எளிமையான வார்த்தைகளில் பூக்களின் மகத்துவத்தை உணர்த்தும் பாடலது. செடியில் இருந்து பறிக்காமல் ஒரு பூவை பார்ப்பதற்கு கூட பழக்கப் படாத பலருக்கும் பூக்களின் பாடல் ஒருபோதும் கேட்பதே இல்லை. இயற்கையின் குரலில் தீராது ஒலித்துக்கொண்டிருக்கும் ஒரு அன்பான வார்த்தை பூ. நீலக் கூடாரத்தில் இருந்து பச்சைக் கம்பளத்தில் விழுந்த நட்சத்திரங்களே பூக்கள். அந்தக் கவிதை ஏற்படுத்திய ஈர்ப்பின் காரணமாக Gibran ன் மற்ற கவிதைகளையும் வாசிக்கத் துவங்கியுள்ளேன்.
இயற்கையின் பேரதிசயங்களில் ஒன்றான பூக்களை பார்த்து புரிந்து கொள்வதென்பதும் அவற்றை நம் வசப்படுத்துவதென்பதும் அவ்வளவு எளிதில்லை என்பதை கல்யாண்ஜியின் இக்கவிதை நிரூபணம் செய்கிறது.
நீ இருக்கும்
திசைக்கு முகம் காட்டி
உன் சதுரமான
எதிர்பார்ப்பின் மேல்
பூக்காது
தொட்டிப்பூ
பூப்பூத்தல் அதன் இஷ்டம்
போய்ப் பார்த்தல் உன் இஷ்டம்.
பூக்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட.... எனும் ஜோதிகாவின் முதல் பாடலை என்னால் புறக்கணிக்கவே இயலாது. கண்ணிமைக்காமல் பார்த்து ரசிக்கும் பாடல்களில் ஒன்றிது. மிகுந்த கவித்துவமான வரிகள் கொண்டது. அதையும் மீறி ஜோதிகாவின் மிக லாவகமான நடன அசைவுகளும், முகபாவத்தில் தென்படும் கள்ளமற்ற தன்மையும், வசீகரமும் ஒரு விதமான கட்டுபாடற்ற சந்தோஷத்தை பிரதிபலிக்ககூடியவை. அந்த பாடல் மீதான மயக்கத்தின் விளைவாக முன்பெப்போதோ கவிதை எனும் பேரில் நான் எழுதி முடித்தது இப்போதும் நினைவில் நீங்காமல் இருக்கிறது.
பூக்களின் சிறப்பை
ஆளுயரப் பூவொன்றே
ஆடிப் பாடி தெரிவிக்கிறதே !
***

அருமையான சிந்தனை. முதிர்ந்த எழுத்து நடை. தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதாங்கள் தங்கள் வலைப்பதிவின் தலைப்பில் ஏதோ தவறு செய்திருப்பதாக இந்த சிறியவன் உணருகிறேன்.
பதிலளிநீக்குவயது முதிர்ந்த ஒருவர் தன் அனுபவங்களை ' என் நினைவில் தோன்றிய எண்ணங்கள் ' என்று கூறுவது சரி.
நீங்கள் தற்போது அனுபவித்துக் கொண்டிருப்பவர். ' தோன்றுகிற எண்ணங்கள் ' என்று சொல்வதல்லவா உசிதமாக இருக்கும்.
ஏதோ தோன்றியதால் சில வார்த்தைகளை கூறியிருக்கிறேன். அலசி ஆராய்ந்து பார்த்து உண்மையை விளக்கவும். கோபம் கொள்ள வேண்டாம் - தயவு செய்து.