1963ல் வெளிவந்த Alfred Hitchcockன் The Birds திரைப்படம் கிராபிக்ஸ் மிரட்டல்களுக்கெல்லாம் முன்னோடி. மிகச் சிறந்த திரைப்படமும் கூட. மனிதர்கள் மீதான சாதாரணப் பறவைகளின் தன்னிச்சையான தாக்குதல்களைப் பற்றியது. அதற்கான காரணம் எளிய புரிதலுக்குரியதல்ல. முற்றிலும் உளவியல் சார்ந்தது. ஆனாலும் கூட படம் ரொம்பவும் பிடித்திருந்தது. அந்தப் படம் தந்த பிரமிப்பில் ஹிட்ச்காக்கின் மற்ற திரைப்படங்களையும் பார்த்தே தீரவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்தது. இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து தினமொரு திரைப்படம் என பத்து ஹிட்ச்காக் படங்களை பார்த்து முடித்தேன்.
1. Psycho
2. Dial M for Murder
3. Notorious
4. Rear Window
5. The Wrong man
6. Rope
7. To catch a thief
8. Strangers on a train
9. Vertigo
10. North by northwest
இப்படங்களை ஒருசேரப் பார்க்கும் போது த்ரில்லர் படங்கள் பற்றி அதுவரை மனதில் இருந்த பிம்பங்கள் யாவும் உருமாறிப்போனது. அந்த பத்து இரவுகளிலும் நான் அடைந்த சிலிர்ப்பும் திகைப்பும் விவரிக்க முடியாதது. ஒருவிதமான அசைவற்றத்தன்மையை உருவாக்கிவிடக் கூடிய வல்லமை பெற்றவை என்றே சொல்லவேண்டும். ஒரு குற்றம் இழைக்கப்படும்போதோ அல்லது மறைக்கப்படும்போதோ குற்றவாளியின் மனவுலகம் எப்படியிருக்கும் என்பதை விவரிப்பதில் தான் சுவாரஸ்யம் கூட்டுவாரே தவிர ஹிட்ச்காக் ஒரு போதும் கொலைகளை சுவாரஸ்யப்படுத்துவதில்லை. அவரது பெரும்பாலான திரைப்படங்கள் நாவல்களை தழுவியதாகவே இருக்கிறது. எனினும் திரைக்கதையை உருவாக்குவதில் அவர் செய்த ஜாலம் அபாரமானது. காண்பவர் யாவரின் ஒருத்துளி கவனம் கூட படத்தைவிட்டு வெளியே சிதறாதபடி நூல் பிடித்தாற் போல் ஒருவிதமான புதிர் நிலையை நோக்கியே காட்சிகளை நகர்த்துவதில் அவருக்கு நிகர் அவரே.
மேலும் ஹிட்ச்காக் தனது திரைப்படங்களில் ஒரு சில வினாடியாவது தான் தலை காட்டி விட வேண்டும் என்பதில் உறுதி கொண்டவராய் இருந்திருக்கிறார். ஆனால் அவர் தோன்றும் காட்சிகள் யாவும், தனக்கும் அந்த திரைப்படத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது போலவே அமைக்கப்பட்டிருக்கும். யாரோ போலவே கடந்து விடுவார். ஒருவேளை அதற்கும் கூட அவரது முக்கிய கதாபாத்திரங்களின் மனோநிலை போலவே ஏதேனும் ஆழ்ந்த உட்பொருள் இருந்திருக்குமோ என்னவோ, யார் அறிவார்?
***

நீங்கள் ஒரு வேலையை நேர்த்தியாக செய்து முடிக்க்கிற தன்மை பாராட்டுதலுக்க்குரியது
பதிலளிநீக்கு