நேற்றிரவு ‘’சாலையை கடக்கும் குழந்தை’’ எனும் தலைப்பில் வார இதழொன்றில் வெளிவந்த நாவிஷ் செந்தில்குமாரின் கவிதையை வாசித்தேன். படித்து முடித்ததும் குழந்தைகளின் மீதான அன்பும் அக்கறையும் பெருகத்துவங்கியது. அதோடு மட்டுமல்லாமல் ஒரு குழந்தையை கைப்பிடித்து கூட்டிக்கொண்டு உலாப்போகும் ஆசையில் மனதும் ஏங்கத்துவங்கியது. குழந்தைகளை வெறும் தொல்லைகளாகவே மட்டும் பார்ப்பவர்களுக்கு இக்கவிதை சிறிதளவாவது அவர்களின் மீது விருப்பத்தை ஏற்படுத்தக்கூடும். போராட்டமும் அவசரமும் நிறைந்த வீட்டில் குழந்தைகள் ஆனந்தமாகவும் பொறுப்பாகவும் வளர வாய்ப்பில்லை என்று யாரோ எப்போதோ சொன்னது நினைவுக்கு வந்தது. ஒரு வீட்டில் குழந்தை பிறக்கிறதென்றால் வாழ்க்கை குறித்து நாம் கற்றுக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பு அது. அவர்கள் உணர்த்தும் பாடங்கள் அற்புதமானவை. அதை விளக்கிச் சொல்வது அவ்வளவு எளிது இல்லை.
இதோ அந்தக் கவிதை:
ஒரு குழந்தை
சாலையைக் கடக்க
உதவக் கோரினால்
சட்டென்று செயல்படாதீர்கள்.
சிறு மலரை
உள்ளங்கையில் வைத்து
விரல்களை குவித்து
மூடித் திறக்கையில்
இதழ்கள் கசங்கவில்லை
என்றால் மட்டுமே
அதன் கரங்களை பற்றுங்கள்.
கடக்கும்போது
எதிர்ப்புரத்தை அடைவதில்
அவசரம் காட்டாதீர்கள்
வாகனத்தில் வருபவர்களையும்
காத்திருக்கச்சொல்லுங்கள்.
மறுமுனையை அடைந்ததும்
‘இனி நீயாக போய்விடு’
என்று சொல்லிக்
கிளம்பிவிடாதீர்கள்.
பள்ளி வரையோ
வீடு வரையோ அழைத்தால்
போய் வாருங்கள்.
அலுவலகத்துக்கு
நேரமாகிவிட்டதாகவோ
இதர வேலைகள் இருப்பதாகவோ
துளியும்
காட்டிக்கொள்ளாதீர்கள்
எவ்வளவு நேரமானாலும்
விடைபெறும் முடிவைக்
குழந்தையிடமே விட்டுவிடுங்கள்.
உங்கள் வயதை
அனுபவத்தை
முடியும் வரை குறைத்துவிடுங்கள்
அதற்குத் தெரிந்த கதைகளை
அதன் மொழியில்
அப்படியே சொல்லவிடுங்கள்
இடையிடையே
‘ம்ம் .. ம்ம் ..” என்று சொல்லுங்கள் .
விண்மீன்கள்தான் எனக்கு
விளையாட்டுப் பொருட்கள்
எனச் சொன்னால்
உடைந்த அல்லது
பழையதாய் ஒன்றை
அதனிடமிருந்து
கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள் .
சில முத்தங்களை கொடுத்தால்
எச்சிலை துடைத்துவிடாதீர்கள்
காய்வதற்குள் வீடு வந்து
நாட்குறிப்பில்
‘சொர்க்கத்தை தரிசித்த தினம்’
என மறக்காமல்
குறித்துவைத்துக்கொள்ளுங்கள்!

படிக்கும்போதே ஒரு குழந்தையின் கரத்தை ஸ்பரிசிக்கத் துடிக்கிறது கைகள். எவ்வளவு அழகான சிந்தனை.
பதிலளிநீக்குஅற்புதமான கவிதை, வாழ்த்துக்கள் மணிமாறன். தொடரட்டும் உங்கள் தமிழ் பணி..
பதிலளிநீக்குபுதுவை வெ. செந்தில்